Hot News
Home » செய்திகள் » தமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வென்று மீள் எழுச்சி பெறும் மகன் அமுதன் மீது வீண்பழி என்கிறார் மாவை

தமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வென்று மீள் எழுச்சி பெறும் மகன் அமுதன் மீது வீண்பழி என்கிறார் மாவை

இலங்கை தமிழரசுக்கட்சி உள்ளக, வெளியக சூழ்ச்சிகள் அனைத்தையும் வெற்றி கொண்டு மக்கள் பலத்துடன் மீள் எழுச்சி பெறும் என்று அதன் தலைவர் மாவை.சோ.சோதிராஜா தெரிவித்துள்ளார்.

தனது மகன் கலைஅமுதன் மீது வீணான பழிகள் சுமத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முன்வைக்கப்பட்டும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பிலும், அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிடும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மறுநாளே ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்த சுமந்திரன் கட்சியின் பின்னடைவுகளுக்கு தலைவராக நானும், பொதுச்செயலாளரும் பொறுப்பு என்ற தொனிப்பட பகிரங்க வெளியில் கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன் மற்றுமொரு உறுப்பினரான சிறிதரன் கட்சியின் தலைமைப்பொறுப்பினை ஏற்பதற்கு தயார் என்றும் கூறியிருந்தார்.

இவை அனைத்துமே கட்சிக்குள் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்களாகின்றன. அதுமட்டுமன்றி கட்சியின் தலைமைப்பதவியை மத்திய செயற்குழுவும், பொதுச்சபையுமே தீர்மானிக்க வேண்டும். அந்த விடயங்களை நான் மேற்படி இரு உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளேன். அத்துடன் சுமந்திரன் தன்னை அரசியலுக்குள் நானே அழைத்துவந்ததாகவும் மேலும் பல விடயங்களையும் ஊடகங்கள் ஊடாக தெரிவித்துள்ளார். அதுபோன்று சிறிதரனும் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருக்கின்றார்.

எது எவ்வாறு இருந்தாலும், எமது கட்சியானது நீண்ட வரலாற்றினைக் கொண்டது. தந்தை செல்வா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்தபோது ஒருதடவை தேர்தலில் தோல்வி கண்டார். அண்ணன் அமிர்தலிங்கம் அவ்வாறு ஒருதடவை தோல்வி கண்டார். ஆனால் பின்னரான நாட்களில் பின்னடைவுக்கான காரணங்களை கண்டறிந்தார். கட்சியை மறுசீரமைத்தார். மக்களையும் நல்லெண்ண சக்திகளையும் ஒருங்கிணைத்து கட்சியை கீழ் மட்டத்திலிருந்து கட்டியெழுப்பினார்.

அவர்களின் பாசறையிலிருந்து வளர்ந்த என்னாலும் அந்தப்பணிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துடன் தற்போதைய சூழலில் தென்னிலங்கையின் அரசியல் சூழலை கருத்திற்கொண்டு எமது அனுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

புதிய உபாயங்களை வகுத்து விடுதலைக்கான பயணத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே எமது கட்சியை பலமான கட்டமைப்பாகவும்,அதேநேரம் தமிழ்த் தேசியப் பரப்பில் ஒருமித்து இயங்ககூடிய அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து வலுவான தமிழ்த் தேசிய தரப்பாக செயற்பட வேண்டியுள்ளது. அதற்குரிய நடவடிக்கைளை நான் முன்னெடுத்து வருகின்றேன். ஆகவே தமிழரசுக்கட்சி நிச்சயமாக மீண்டும் எழுச்சி பெறும். அனைத்து சூழ்ச்சிகளையும் வெற்றிகொள்ளும் என்றார்.

அமுதன் மீதான குற்றச்சாட்டு

இதேவேளை, புதல்வாரன கலைஅமுதன் மற்றும் கனகசபாபதி ஆகியோர் பிரசாரத்தில் இடம்பெற்றபோது நடந்து கொண்ட முறைமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை, என்னிடத்தில் கலைஅமுதன் சம்பந்தமான முறைப்பாடொன்று கிடைத்தது. அவர் என்னை மட்டும் முன்னிலைப்படுத்தி வாக்கு கோருகின்றார் என்பதே அதுவாகும். அந்தச்சந்தர்ப்பத்தில் உடனடியாக நான் அவரை அழைத்து, நடுநிலையாக செயற்படுமாறு அறிவுரை வழங்கியிருந்தேன். அத்துடன் அவ்விடயம் முடிவுற்றது.

இவ்வாறிருக்க அதன் பின்னர் அவர் மீது திட்டமிட்டே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் அரசியல் பின்னணியைக் கொண்டவை. ஆகவே அவ்விதமான வீண்பழிகளை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்றார்.

அரசியல் குழு

நாளை சனிக்கிழமை எமது அரசியல் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாம் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்தாராயவுள்ளதோடு விரைவில் மத்திய குழு கூட்டமும் நடைபெறவுள்ளது என்றார்.

Author: TELO Admin