Hot News
Home » செய்திகள் » தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு விடுத்த அழைப்பிற்கு முற்றாக முடங்கியது வடக்கு கிழக்கு: ஒரே குரலில் ஒலித்தது தமிழர்களின் நிலைப்பாடு!

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு விடுத்த அழைப்பிற்கு முற்றாக முடங்கியது வடக்கு கிழக்கு: ஒரே குரலில் ஒலித்தது தமிழர்களின் நிலைப்பாடு!

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு விடுத்த அழைப்பிற்கு வடக்கு, கிழக்கு மக்கள் பூரண ஆதரவளித்தனர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் முற்றாக முடங்கின.

இன்றைய கதவடைப்பு போராட்டத்தை நீர்த்து போக செய்ய ஒவ்வொரு பிரதேசத்திலும் பாதுகாப்பு தரப்பினர் பகீரதப் பிரயனத்தனம் மேற்கொண்டபோதும், அது வெற்றியளிக்கவில்லை.

யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளும் இன்று முடங்கின. வர்த்தக நிலையங்கள், உள்ளூர் தனியார் போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை. பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவில்லை. மிகச்சில மாணவர்களே சென்றனர். இதனால் கல்வி செயற்பாடுகள் இயங்கவில்லை.

காலையில் சில தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்ட போதும், உடனடியாக அவையும் சேவையை நிறுத்திக் கொண்டன.

அரசாங்க நிறுவனங்கள் இயங்கின. எனினும், மக்கள் அலுவலகங்களிற்கு செல்லவில்லை. அலுவலகங்களிலும் ஊழியர் வரத்து குறைவாக இருந்தது.

எல்லா முக்கிய நகரங்களிலும் பொலிசார், இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டது. சில பகுதிகளில் மூடப்பட்ட கடைகளை வீடியோ படம் பிடிக்கப்பட்டது.

அச்சுவேலியில் படையினர் களமிறங்கி கடைகளை திறக்க வற்புறுத்தினர். இதனால் காலையில் சில கடைகள் திறக்கப்பட்டன. எனினும்,தமிழீழ விடுதலை (ரெலோ)இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான த.நிரோஷ் அங்கு சென்று, அச்சுறுத்தலிற்கு அடி பணிய தேலையில்லையென வர்த்தகர்களிற்கு தெரிவித்ததையடுத்து, வர்த்தகர்கள் கடைகளை பூட்டினார்கள்.

கிளிநொச்சி

வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டன. உள்ளூர் தனியார் போக்குவரத்துகள் இயங்கவில்லை. பாடசாலைகளில் மாணவர் வரத்து மிகமிக குறைவாக இருந்தது.

அரச அலுவலகங்கள் திறக்கப்பட்ட போதும், பொதுமக்கள் வரத்து குறைவாக இருந்தது.

வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாலைக்கு பின்னர் நகரில் தனியார் வர்த்தக நிலையங்கள் திறந்தன.

வடமாகாண கல்வி திணைக்களத்தினால் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களிற்காக நடத்தப்பட்ட பரீட்சை இன்றைய கதவடைப்பினால் கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடக்கவில்லை. கிளிநொச்சியில் மாத்திரம் நடைபெற்றது. கிளிநொச்சியில் பரீட்சை நடைபெற்றதால், ஏனைய பகுதிகளிற்கு இனிமேல் புதிய வினாத்தாள் தயாரிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

வவுனியா

வவுனியாவிலும் தமிழ் பகுதிகளில் முழுமையான கதவடைப்பு இடம்பெற்றது. நகரில் காலையில் சில வர்த்தக நிலையங்களும், சந்தையும் திறந்த போதும், பின்னர் அவை பூட்டப்பட்டன.

நகரில் கடைகளை திறக்க வைக்க பொலிசார் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். கடை உரிமையாளர்களிடம் நேரிலும், தொலைபேசியிலும் பேசி கடைகளை திறக்க அறிவுறுத்தினர். பின்னர் பொலிஸ் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் கடைகளை திறக்க அறிவுறுத்தல் வழங்கினர்.

எனினும், வர்த்தகர்கள் கடைகளை திறக்கவில்லை.

வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மன்னார்

மன்னாரில் முழுமையான கதவடைப்பு இடம்பெற்றது. தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் அனைவரும் கடைகளை அடைத்தனர். பாடசாலைகளிற்கு மாணவர் வரத்து மிக குறைவாக இருந்தது.

அரச, தனியார் போக்குவரத்து சேவைகள் இயங்கின. எனினும், பயணிகள் குறைாக இருந்தனர்.

அரச அலுவலகங்களிலும் பொதுமக்கள் அதிகமாக தென்படவில்லை.

முல்லைத்தீவு

தமிழ், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. பாடசாலைகளிற்கு மாணவர்கள் மிக குறைந்தளவிலேயே சென்றனர். தனியார் போக்குவரத்து துறை சேவையில் ஈடுபடவில்லை.

மல்லாவியில் வர்த்தக நிலையங்களை திறக்க பொலிசார் முயற்சி மேற்கொண்டனர். வர்த்தக நிலைய பெயர்ப்பலகையிலுள்ள தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பேற்படுத்தி, வர்த்தக நிலையங்களை திறக்கும்படி அறிவுறுத்தினர். எனினும், வர்த்தக நிலையங்கள் திறக்கவில்லை.

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் முழுமையான அடைப்பு மேற்கொள்ளப்பட்டது. தனியார் போக்குவரத்து துறையும் கதவடைப்பிற்கு ஒத்துழைத்தது.

பாடசாலைகளில் மாணவர் வரத்து குறைவாக இருந்தது. அரச அலுவலகங்களிற்கும் மக்கள் செல்லவில்லை. வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

முஸ்லிம் பகுதிகள், தமிழ் முஸ்லிம் கலந்துள்ள வாழைச்சேனை போன்ற பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன.

வாழைச்சேனையில் பிள்ளையான் குழு மற்றும் இராணுவ தரப்புடன் இணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிலர், கதவடைப்பிற்கு எதிராக ஒன்றுகூடி கோசமெழுப்பினர்.

திருகோணமலை

திருகோணமலையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கதவடைப்பு போராட்டம் இடம்பெற்றது. நகரில் தமிழ் பகுதிகள் இயங்கவில்லை. போக்குவரத்து இடம்பெற்றது. அரச அலுவலகங்கள் இயங்கின. மாணவர்கள் வரத்து குறைவாக இருந்தது.

புறநகர் பகுதிகள் பலவும் முடங்கின.

அம்பாறை

அம்பாறையில் ஆதிக்கம் செலுத்தும் முஸ்லிம்களின் கடைகள் திறந்திருந்தன. இதனால் பல தமிழ் கடைகளும் திறந்தன. எனினும், சில தமிழ் பகுதிகளில் ஓரளவுக்கு கடைகள் பூட்டப்பட்டிருந்தன.

Author: TELO Admin