Hot News
Home » செய்திகள் » யாழில் ஜனாதிபதியின் பதாகைகளை கிழித்ததாக குற்றஞ்சாட்டி 4 இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்!

யாழில் ஜனாதிபதியின் பதாகைகளை கிழித்ததாக குற்றஞ்சாட்டி 4 இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்!

ஜனாதிபதியின் பதாகைகளை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு யாழ். கெட்டுவன்புலம் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியதுடன் கைதுசெய்துள்ளனர்.

இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இந்த நான்கு இளைஞர்களும் தெல்லிப்பழை பொலிசாரிடம் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ். தெல்லிப்பழை கிழக்கு பிரதேசத்திலுள்ள கட்டுவன்புலம் பகுதியில் உள்ள நாமகள் சனசமூக நிலையத்தடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானவர்களாவர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இவர்கள் சனசமூக நிலையத்திற்கு அண்மையாக இருந்து கதைத்தக் கொண்டிருந்த வேளையில் குறித்த இடத்திற்கு இராணுவத்தினர் நால்வர் வந்தனர்.

அதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் நால்வரையும் தாக்கியதுடன் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு இராணுவத்தினரின் மேலதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்

இதனை தொடர்ந்து சுமார் இருபத்தைந்தக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் விரைந்து வந்து அந்தப் பகுதியில் நின்றிருந்த ஏனையவர்களையும் தாக்கியதுடன், பெண்களையும் தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டியதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

நாகேஸ்வர ஸ்ரீ யர்சன் 22 வயது, ரவீந்திரன் கஜீபன் 21 வயது, முருகையா அசோக்குமார் 35 வயது மற்றும் அல்பிரட் பிரதீபன் 30 வயது ஆகிய நால்வர்களே இவ்வாறு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேலும் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Author: TELO Media Team 1