Hot News
Home » செய்திகள் » மீனவர்கள் விவகாரம்! இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன – இந்திய அமைச்சர் சரத்பவார் சந்திப்பு

மீனவர்கள் விவகாரம்! இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன – இந்திய அமைச்சர் சரத்பவார் சந்திப்பு

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா–இலங்கை அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் வேளாண்துறை அமைச்சர் சரத் பவாரும், இலங்கை சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவும் பங்கேற்றனர்.

மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்துவதும், மீனவர்களை கைது செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து, இலங்கை அமைச்சர் ராஜித சேனரத்னவுடன் மத்திய அமைச்சர் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்சினை குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன, ”இலங்கையின் அட்டானி ஜெனரலுடன் பேசி மீனவர்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யப்படும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் நாளை முதல் விடுவிக்கப்படுவார்கள்.

அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்படும். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் உள்ளடக்கிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

அதேவேளை, எதிர்வரும் 20ம் திகதி சென்னையில் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கு முன்னோட்டமாக இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும்இ அவர்களது படகுகளும் நாளை வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், இன்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த மாதம் 20 ம் தேதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் அவர் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

இந்த பயணத்துக்கு வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மற்றும் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவை தெரிவித்துள்ள எதிர்ப்பை அவர் நிராகரித்தார்.

இருநாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், இருநாடுகளுக்கும் இடையிலான கடல் வளத்தை மேம்படுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிப்பத்தற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும், இது குறித்து ஆராய ஒரு நிதியத்தை ஏற்படுத்த இந்தியா முழுமையாக பண உதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Author: TELO Media Team 1