Hot News
Home » செய்திகள் » இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்போர் மீது தொடர்ந்தும் நெருக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்போர் மீது தொடர்ந்தும் நெருக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் மனித உரிமை நிலைமைகளில் மேம்பாடு குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் மிகச் சொற்பளவிலான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பல வகையில் பிரசாரம் செய்து வருகின்றது.

எனினும், போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனை உலகம் இன்னமும் உணரவில்லை.

திருகோணமலையில் 5 மாணவர்கள் 2006ம் ஆண்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை, போர்க்கால இழப்புக்கள் குறித்த நாடு தழுவிய கணக்கெடுப்பு போன்ற நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை.

எவ்வாறெனினும், இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலான இறுதி கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது நிச்சயமற்றதன்மையைக் கொண்டிருக்கின்றது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பதனை உறுதியாக கூற முடியாது.

இலங்கையில் அரசாங்கத்தை விமர்சனம் செய்வோர் தொடர்ந்தும் நெருக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

2014 உலக அறிக்கை என்ற தலைப்பில் மனித உரிமை கண்காணிப்பகம் 667 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சிரியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

Author: TELO Media Team 1