Hot News
Home » செய்திகள் » நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்களின் நிலங்களை இன்னமும் ஆக்கிரமித்திருக்கும் இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோரியும் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட த.தே.மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரனை விடுதலை செய்யக் கோரியும் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிளிநொச்சி அரச செயலகம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக்கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியுள்ளது.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மற்றும் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் உட்பட பல பகுதிகள் இன்னமும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் வீடுகளுக்குச் சொந்தமான மக்கள் தொடா்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மக்களுக்குச் சொந்தமான காணகள் வீடுகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுடன் அவை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் எனவும் வலியுறுத்தியும், மக்களுக்குகாக நீதி கேட்டுப் போராட முற்பட்ட கட்சியின் மாவட்ட அமைப்பாளா் ஜெகதீஸ்வரன் அவா்கள் விடுவிக்கப்படல் வேண்டும் என வலியுத்தியும்,

கிழக்கு மாகாணத்தில் சம்புர் கிராமம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு கிராமம், யாழ் மாவட்டத்தில் வலி வடக்கு, வளலாய், கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான், மருதநகர், பாரதிபுரம், இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள வீடுகள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தே போராட்டம் இடம்பெற்றது.

கடுமையான இராணுவ அச்சுறுத்தல்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளா் விசுவலிங்கம் மணிவண்ணன் உட்பட மாவட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களும், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்ட உரிமையாளா்கள் போன்றோரும் கலந்து கொண்டனார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களான சிறீதரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினா்களான பசுபதிப்பிள்ளை, ரவிகரன், சிவாஜிலிங்கம், ஐங்கரநேரசன், குருகுலராசா, பிரதேச சபை உறுப்பினா்களான சஜீவன், சதீஸ், கிளி பிரதேச சபைத் தலைவா் குகராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவா்களை கைது செய்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அடைப்பதன் மூலம் இப் போராட்டத்தினை குழப்பிவிடலாம் என்று அரசு செயற்பட்டது.

எனினும் கைது அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றிகரமாக மேற்படி போராட்டத்தினை நடாத்தி சா்வதேச சமூகத்திற்கு கிளிநொச்சி மக்களின் நில ஆக்கிரமிப்பு பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது.

Author: TELO Media Team 1