Hot News
Home » செய்திகள் » உள்நாட்டு விவகாரங்களில் இலங்கைத் தூதரகம் தலையீடு: மலேசிய எம்.பி. குற்றச்சாட்டு

உள்நாட்டு விவகாரங்களில் இலங்கைத் தூதரகம் தலையீடு: மலேசிய எம்.பி. குற்றச்சாட்டு

கோலாம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 15ம் திகதி 3 தமிழீழ அகதிகள் மலேசிய உள்துறை அமைச்சால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அந்த மூவரும் பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த 10 வருடங்களாக இங்கு வாழ்ந்து வரும் அந்த மூவரும் இந்த நாட்டில் எந்த ஒரு சதி நாச வேலையில் ஈடுபட்டதாகவோ, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பும் பங்கம் விளைவித்ததாகவோ எந்த ஓர் அத்தாட்சியும் இல்லாமலேயே அவர்கள் திடீரென பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம். ஆனால் அந்த இயக்கம் மலேசியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.

இதனையொட்டி கடந்த 2004ல் நாடாளுமன்றத்தில் நான் கேள்வி கேட்ட போது தமிழீழ விடுதலை இயக்கம் இந்நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல என அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் தலைவர்களே அந்நாட்டில் போர்க்குற்றங்கள் புரிந்தவர்களாகவும், மனித உரிமை மீறல்கள் செய்தவர்களாகவும், இனப்படுகொலை புரிந்தவர்களாகவும் கருதப்படும் இவ்வேளையில் இந்த மூவரும் அங்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்ட வசமானது.

கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து ஐநாவின் மனித உரிமை ஆணையத்தினரால் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்னும் சொல்லப்போனால் விரைவிலேயே சிறீலங்காவின் போர்க் குற்றங்களை ஆராய சுயேட்சை ஆணையம் ஒன்றினையும் ஐ நா அமைக்க உள்ளது.

கடந்த 2009 இல் நடந்த இறுதி கட்ட உள்நாட்டுப் போரின் போது ஏறக்குறைய 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்களுடன் பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சனல் 4 ல் வெளியான “நோ பயர் சோன்” என்ற ஆவணப்படத்தைப் பார்ப்போருக்கு எந்த அளவிற்கு இலங்கை அதிகாரிகள் அந்தப் படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரியவரும்.

மலேசியா, 1951ஆண்டு அகதிகள் உடன்படிக்கையில் கையொப்பமிடாவிடினும், அகதிகளின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படும் என்று சந்தேகங்கள் எழுந்தால் அவர்களை அவர்களின் நாட்டுக்கு அனுப்பக்கூடாது என்கிறது அனைத்துலகச் சட்டம். அதுவும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் நன்கு தெரிந்திருந்தும் அவர்களை அந்த நாட்டிற்கு அனுப்புவது ஓர் இரக்கமற்றச் செயல்.

இலங்கை அதிகாரிகளின் அத்துமீறல்கள் இவ்வளவு தெளிவாகத் தெரிந்து இருக்கும் பொழுது எப்படி நமது விசாரணை அதிகாரிகள் இந்த மூவரையும் திடீரென “பயங்கரவாதிகள்” என முத்திரை குத்தினர்?

எந்த அளவிற்கு சிறீலங்கா தூதரகம் நமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு தலைமை பொலிஸ் அதிகாரியையே தனது கைப்பாவையாக வைத்துள்ளது என்பது தெள்ளத் தெளிவு. “நோ பயர் சோன்” திரைடப்பட்டபோது லீனா ஹென்றி கைது செய்யப்பட்ட ஒன்றெ இதற்கான சிறந்த உதாரணம் என்று கொள்ளலாம்.

அந்த மூவரும் நிச்சயமாக இலங்கை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு கடைசியில் கொல்லப்படுவார்கள் என்று துல்லியமாக தெரிந்திருந்தும் ஏன் நமது அதிகாரிகள் வேண்டுமென்றே இந்த குற்றச் செயலுக்கு துணை போகிறார்கள்?

நாளை இதே தூதரக அதிகாரிகள், நான் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவன் என்று குற்றஞ்சாட்டினால் என்னையும் கைது செய்து இலங்கைக்கு அனுப்பிவிடுவார்களா?

இலங்கையுடான இருத்தரப்பு உறவுகள் மனித உரிமை மீறல்களுக்கும் மனிதநேயத்திற்கும் அப்பாற்பட்டதா?

மனித உரிமை கண்காணிப்பு குழு இந்த நாடு கடத்தலை வன்மையாக கண்டித்ததோடு அல்லாமல், “உனக்குப் பாடம் கற்பிப்பேன்” என்ற Srilanka-Tamil war தலைப்பிலான அதன் அறிக்கையில் 2000க்கும் 20012க்கும் இடையில் நடைபெற்ற 75 பாலியல் பாலாத்காரம், கற்பழிப்பு போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இவைகள் அதிகாரப்பூர்வ தடுப்புக் காவல் மையங்களிலும் இரகசிய தடுப்புக் காவல் இடங்களிலும் நடை பெற்றுள்ளன. பொலிசாராலும் ஆயுதப்படையினராலும், துணை இராணுவத்தினராலும் எப்படியெல்லாம் ஆண்களும் பெண்களும் அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்த நாடு கடத்தல் மிகவும் கொடூரமான மனிதாபிமான மற்ற செயலாகும். ஐநாவால் அகதிகள் என்ற தகுதி வழங்கப்பட்டு அதற்குறிய அட்டைகள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் நாடுகடத்துவது என்பது ஒரு முறையற்றச் செயலாகும்.

இது போன்ற செயல் மலேசியா போன்ற முன்னேறிவரும் நாடுகளுக்கு ஏற்புடையதல்ல எனவும் குலசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Author: TELO Media Team 1