இரண்டு மாகாணங்களினதும் ஆட்சியைக் கூட்டமைப்பு கைப்பற்றும் பட்சத்தில் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பில் இரண்டு மாகாண அரசுளும் பேசி சில முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்தத் தேர்தலில் நாங்கள் முழு மூச்சாகப் பங்குபற்றி ஆட்சியைக் கைப்பற்றுவதே நோக்கமாகும் என வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு பயணம் செய்த அவர் மட்டக்களப்பு ரெலோ அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்தமுறை நாங்கள் போட்டியிடவில்லை. இம்முறை நாங்கள் போட்டியிடுவதன் நோக்கத்தை நாங்கள் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இந்தத் தேர்தலானது வரலாற்று முக்கியத்துவமிக்க தேர்தலாகும்.
காரணமென்னவென்றால் உலக நாடுகளுக்குத் தமிழ் மக்களின் உரிமை மற்றும் இன்று என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை வெளிக்காட்டவேண்டிய ஒரு தேர்தலாகவே நாங்கள் நோக்குகின்றோம்.
இதில் அரசு கூடுதலான ஆசனங்களைப் பெறும் பட்சத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களை ஆதரிக்கின்றனர், கிழக்கு மாகாணத்தில் எதுவித பிரச்சினையும் இல்லை. அதேபோன்று வடக்கு மக்களையும் நாங்கள் சரியான முறையில் வழிநடத்திச் செல்லும்வாய்ப்பு இருக்கின்றது என்று நியாயப்படுத்தி ஐ.நா அழுத்தங்களைக் குறைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.
கிழக்கு மாகாண மக்கள் கடந்த தேர்தல்களிலும் சரி உரிமை பிரச்சினைகளிலும் சரி உணர்வோடு, தேசியத்தோடுதான் இவ்வளவு காலமும் வாழ்ந்துவருகின்றனர். இன்றும் அதற்கான உதாரணங்கள் பலவற்றைக் கூறலாம்.கடந்த தேர்தல்களில் பல அழுத்தங்கள் இருந்தும் கூட மிரட்டல்கள் இருந்தும் கூட தங்களது வாக்குகளைத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்திருந்தனர்.
இன்று அரசோடு இருக்கின்ற பிள்ளையான் போன்றவர்களுக்கும் முரளிதரன் போன்றவர்களுக்கும் இங்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகளுடன் இருந்த தமிழர்கள் வெல்லப்படவில்லை.
அவர்களை வெல்ல வைக்க கிழக்கு மக்கள் விரும்பவில்லை. இதிலிருந்து கிழக்கு மாகாண மக்களின் உணர்வுதெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதில் மிக முக்கியமாக அனைவரும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் நிச்சியமாக ஆட்சியை கைப்பற்றலாம்.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்வேண்டும் என்ற சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி இந்த மக்கள் அதனை உருவாக்கியுள்ளனர்.
என்றைக்கும் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம்தான் மக்கள் இருக்கின்றார்கள் என்று இந்த இலங்கை அரசும் உலக நாடுகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.