Hot News
Home » செய்திகள் » தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் போராட்டம் நிறைவுக்கு வந்தது

தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் போராட்டம் நிறைவுக்கு வந்தது

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசன் அவர்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன்,  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தவிசாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோருடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.ஜனகன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் விஷ்ணுகாந்தன் ஆகியோரும் அங்கு சென்று கனகசபை தேவதாசன் அவர்களின் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தனர்.

இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார்.

கடந்த 15ம் திகதி முதல் மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.

தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

வெலிக்கடை மகஸின் சிறையில் கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கனகசபை தேவதாசன் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராக கடமை புரிந்துள்ளார்.

62 வயதுடைய தமிழ் அரசியல் கைதியான தேவதாசன், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தன்டனைக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு வசதியளிக்குமாறு கோரியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 


2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் கைது செய்யப்பட்ட தேவதாசனுக்கு 2017 ஆம் ஆண்டு கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆயுள்த் தன்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. தனக்காக வாதாட சட்டத்தரணிகள் எவரையும் தேவதாசன் அப்போது அனுமதித்திருக்கவில்லை.

மாறாக தேவதாசனே தனக்காக நீதிமன்றத்தில் வாதாடியிருந்தார். மேன் முறையீடு செய்வதற்கு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டத்தரணியின்றி மனு ஒன்றைத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு கோரி இலங்கை நீதியமைச்சுக்குத் தேவதாசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.