Hot News
Home » செய்திகள் » இராணுவத் தளபதியின் நியமனத்தை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது

இராணுவத் தளபதியின் நியமனத்தை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது

இலங்கையில் யார் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்கத் தூதுவர் தீர்மானிக்க முடியாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னைய வெளிவிவகார அமைச்சரின் காலத்தில் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுத்து ஐ.நா மனித பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமையைப் பயன்படுத்தியே அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் மருந்துகளின் விலைகுறைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமெரிக்காவுக்கு சமமான இறைமை எமக்கும் உள்ளது. இவ்வாறான நிலையில் முப்படைகளின் பிரதானி என்ற ரீதியில் அரசியலமைப்பு ரீதியாக தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி புதிய இராணுவத் தளபதியை நியமித்துள்ளார். யார் இராணுவத் தளபதியாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தனிப்பட்ட அதிகாரம் அவருக்கு உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், இராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் தான் கவலையடைவதாக அமெரிக்கத் தூதுவர் கூறுவாராயின், ஆப்கானிஸ்தானில் பல்வேறு மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கக் கூடாது என எம்மாலும் கூற முடியும். நாம் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக எமக்கு எதிராக அமெரிக்கா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றைக் கொண்டுவந்தது.

அவ்வாறு பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா, மனித உரிமை பேரவையின் உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொண்டது. மனித உரிமை தொடர்பில் விசாரணை நடத்தும் கட்டமைப்பில் நம்பிக்கையில்லையெனக் கூறியே அமெரிக்கா விலகியிருந்தது. இவ்வாறான நிலையில் இலங்கை குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர் என்றார்.