Hot News
Home » செய்திகள் » மாகாண சபைத் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கக் கோரும் சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கக் கோரும் சுமந்திரன்

மாகாணசபை தேர்தலை விரைந்து நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முயற்சிகளிற்கு இடைக்கால தடைவிதிக்க கோரி நேற்று (21) உயர் நீதிமன்றத்தில் இடைமனுதாரராக எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையின்றி மாகாணசபை தேர்தலை நடத்தலாமா என்பதை தெளிவுபடுத்தும்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோரியுள்ளார். நாளை மறுநாள் இந்த விடயத்தை ஆராய, ஐந்து நீதிபதிகளை கொண்ட ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று உயர்நீதிமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் இடைமனுதாரராக இணைந்து கொள்ள இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஐ.தே.க அரசாங்கம் மாகாணசபை தேர்தலை காலவரையின்றி தள்ளி வைத்து வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த நிலையில், சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை தாக்கல் செய்திருந்தார். பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த அனுமதி கோரியே பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வியாக்கியானத்தின் மூலம் தேர்தலை விரைந்து நடத்தும் வாய்ப்புக்கள் ஏற்படாமல் தடுக்கவே, நாடாளுமன்றத்தில் இந்த தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

எல்லை நிர்ணய அனுமதியின்றி தேர்தலை நடத்தும் ஜனாதிபதியின் முயற்சிகளிற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டுமென்றும் சுமந்திரனின் இடையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.