Hot News
Home » செய்திகள் » இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் `ரெலோ` சிவாஜி

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் `ரெலோ` சிவாஜி

இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டுமென யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பில் இன்று (22) ஊடகங்களைச் சந்தித்து கருத்துக்களை வெளியிடும் போது இவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது

இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துள்ளது. இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கு எதிரான போர்பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம் பெற்றிருந்தன அவ்வாறு இடம் பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட சவேந்திர சில்வாவிற்கு மைதிரி ரணில் அரசு இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இலங்கை அரசின் இந்த மிலேச்சகரமான செயற்பாட்டை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கு பற்றி கண்டனம் தெரிவிப்பேன் அது மட்டுமல்லாது ஐ.நா ஆணையாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து சர்வதேசம் இனியும் இலங்கையை நம்பக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவுள்ளேன்.

ஐ.நாவால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு விசாரணை ( கலப்புப் பொறிமுறை) க்கான கால நீடிப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தவுள்ளேன். இனியும் இலங்கை அரசுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்காது ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விடையத்தைக் கொண்டு சென்று இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார்.

இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்று கருதப்படும் அத்தனை தரப்புக்களையும் நீதியாக விசாரிக்கவேண்டும். இலங்கை அரசின் கடந்த கால ஏமாற்று நாடகங்களை சர்வதேசம் தற்போது உணர்ந்திருக்கும் எனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்ல இனியும் காலம் தாமதிக்காது சர்வதேசமும் எமது தமிழத்தரப்புக்களும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.