Hot News
Home » செய்திகள் » மாகாண சபை முறைமையை நீக்குவதா அல்லது நீட்டிப்பதா என ஆராய்கிறது அரசாங்கம் – கம்மன்பில

மாகாண சபை முறைமையை நீக்குவதா அல்லது நீட்டிப்பதா என ஆராய்கிறது அரசாங்கம் – கம்மன்பில

இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பின் முதலாவது வரைபை அரசாங்கம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், மாகாணசபை முறைமைக்கு என்ன செய்வது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்களே அரசியல் கைதிகளென பெயர் சூட்டப்படுகிறார்கள்

மாகாணசபை முறைமை நீக்கப்படுமா அல்லது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து விமர்சனக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

மாகாணசபை முறைமை அவசியமா இல்லையா என்பது குறித்து அரசாங்கத்தில் கருத்து,மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த விடயம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

எனினும் எதிர்க்கட்சியினர், தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இன்று மாகாணசபை தேர்தலை சாட்டாக வைத்துக்கொண்டு விமர்சனக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் மாகாணசபை தேர்தலை நடத்தாது ஆட்சியை தக்கவைக்க பல சூழ்ச்சிகளை செய்தனர்.

மாகாணசபைகள் இன்று காலாவதியாகியுள்ளமைக்கு முன்னைய அரசாங்கமும் அவர்களுக்கு துணை நின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுமே காரணமாகும்.

வடக்கு தமிழ் மக்கள் இன்று நெருக்கடியை சந்திக்கவும், கிழக்கில் முஸ்லிம் மக்கள் நெருக்கடியை சந்திக்கவும் முன்னைய ரணில் -மைத்திரி ஆட்சியை ஆதரித்து அவர்களுக்குதுணை நின்றவர்களே காரணம்.

எது எவ்வாறு இருப்பினும் இன்று நாம் மக்கள் ஆட்சியை உருவாக்கி இந்த நாட்டிற்கு ஏற்ற சட்ட திருத்தங்கள் குறித்து கவனத்தில் கொண்டு அதற்கமைய தீர்மானங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு இந்த நாட்டின் புதிய பயணம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்புக்கான ஆரம்ப வரைபு முன்வைக்கப்படும். இதில் சகல கட்சிகள், சிவில் அமைப்புகள் என சகலரதும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும். இந்த வேலைத்திட்டங்கள் இப்போதே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் மாகாணசபை முறைமை உள்வாங்கப்படுமா அல்லது இந்தியா திணித்த 13ஆம் திருத்தும் நீக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் தீர்மானம் எடுக்கப்படும்.

இதில் மக்களின் கருத்துக்கள் ஆராயப்படும். இப்போது நீண்ட காலமாக மாகாணசபைகள் இயங்காது மக்கள் எந்தவித கஷ்டங்கயையும் சந்திக்காது உள்ளனர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

TELO Admin