Hot News
Home » செய்திகள் » ’சுமந்திரன் கூறியது அப்பட்டமான பொய்’

’சுமந்திரன் கூறியது அப்பட்டமான பொய்’

ஐ. நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு, நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாகக் கூறியிருப்பது, அப்பட்டமான பொய்; அது வேடிக்கையான கருத்தாகுமென யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல, இந்தக் கடித விவகாரம் தொடர்பில், சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன. சுமந்திரன் எனது பார்வைக்காக அனுப்பிய கடிதத்தை, தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார்.

எது உண்மை, எது பொய் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்தக் கடித்தை, எனக்குத் தந்தது சுமந்திரனே. எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன், அதைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் தெரிவித்ததாக எனக்கு ஞாபகமில்லை. ‘நாங்கள்’ என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

. இந்த வரைபைப் படித்துப் பார்க்கின்ற எவருக்குமே, இந்த வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே என்பது புலன் ஆகும். இதில் எந்த மயக்கமும் இருக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமந்திரன் எனக்கு அனுப்பிய வரைபை, நான் பகிரங்கப்படுத்தவில்லை. அதற்கு நான் அளித்த பதிலையே பகிரங்கப்படுத்தினேன். இவ்வாறு நான் பகிரங்கப்படுத்தியதால் தான், அவரது கபடத்தனமான முயற்சி முறியடிக்கப்பட்டது. நான், என் பதிலைப் பகிரங்கப்படுத்தியமை காரணமாக, அரசாங்கம் நாம் என்ன செய்கின்றோம் என்று விழித்துக்கொண்டு விட்டது என்று, நகைப்புக்கிடமான கருத்துகளைக் கூறி வருகிறார். உண்மையில், சுமந்திரனின் வரைபு, அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதில் அரசாங்கம் கோபப்பட என்ன இருக்கிறது என்று, எனக்கு விளங்கவில்லை.

இதேவேளை, வவுனியாவில் நேற்று (நேற்றுமுன்தினம்) நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மனித உரிமைகள் சபை தொடர்பிலான பொதுவான வரைபு ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது நல்ல விடயம். மூன்று கட்சிகளுக்கும் இடையே இது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுவதற்கு என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன். குறித்த வரைபு எது என்று இதுவரையில் தெரியாது.

ஆனால், அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஆகியவை சாத்தியம் இல்லை போன்ற கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவை சாத்தியமோ சாத்தியம் இல்லையோ, பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில், கிடைக்கின்ற எல்லா வழிகளையும் நாம் முயற்சிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
.
அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை, புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு, அவரை அன்புடன் வேண்டுகின்றேன் என்றும் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TELO Admin