Hot News
Home » செய்திகள் » கூட்டமைப்பிடம் ஜெய்சங்கர் தெரிவித்ததென்ன?

கூட்டமைப்பிடம் ஜெய்சங்கர் தெரிவித்ததென்ன?

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நீண்டகாலமாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாகவும் ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லையென இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரிடமும் எடுத்துக்கூறி வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டினை சந்திப்புக்களை மேற்கொண்ட சகல தரப்புக்களிடத்திலும் வெளிப்படுத்தியுள்ளதோடு, மாகாண சபைகள் முறைமை தொடரப்பட வேண்டும் என்றும், விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக் கூறியதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டமைப்பினரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் காலை 9.30 இற்கு ஆரம்பமாகியிருந்தது.

சுமார் ஒன்றரை மணிநேரமாக நடைபெற்ற இந்தச் சந்தப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனரிராஜா, புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி.எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நேற்றையதினம் (நேற்றுமுன்தினம்) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் சந்திப்பினை நடத்தியன் பின்னர் கூட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஐக்கிய இலங்கையில் சமத்துவம், நீதி, சமாதானம், மரியானை ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறும் கேட்டிருந்தார்.

அவருடைய இந்த அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் சார்பாக நான் பாராளுமன்றத்தில் சொற்ப நேரத்திலேயே வரவேற்றும், நன்றிகளைத் தெரிவித்தும் இருந்தேன். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், அவருடைய(ஜெய்சங்கர்) கருத்துக்களை தமிழ் மக்கள் மற்றும் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்றதோடு நன்றிகளையும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவர் (ஜெய்சங்கர்), இந்தியா தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஐக்கிய இலங்கைக்குள் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன் தமிழர்கள் சமத்துவம், கௌரவம், அமைதி, சமாதனத்துடன் தமது பிரதேசங்களில் வாழ வேண்டும் என்பதில் அதீத கரிசனை கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அத்துடன், நீண்டகாலமாக இந்தியாவின் நிலைப்பாடாகவுள்ள இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது, மாகாண சபைகள் முறைமை தொடர்பில் சமகாலத்தில் உள்நாட்டில் உள்ள நிலைமைகளை நாம் (கூட்டமைப்பு) சுட்டிக்காட்டியிருந்தோம். அதன்போது, அவர்(ஜெய்சங்கர்) மாகாண சபைகள் முறைமை நீக்கப்படக்கூடாது என்பதோடு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி இந்த விடயங்களை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட தன்னைச் சந்தித்த இலங்கையின் அனைத்து அரச தரப்பு பிரதிநிதிகளிடத்தலும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக் கூறியதாக கூறினார்.

இதன்போது, இந்தியாவின் ஆழ்ந்த கரிசனை தொடர்ச்சியாக இருக்கின்றமைக்கு நாம் நன்றிகளை மீண்டும் கூறியதோடு இந்த விடயங்களை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்காக இந்தியாவின் வகிபாகம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். வட, கிழக்கு அபிவிருத்தயும் பாதிக்கப்பட்ட மக்கள் விவகாரமும் அதனையடுத்து, வடக்கு கிழக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியா தயாராகவுள்ளதாகவும் இந்திய முதலீட்டாளர்கள் வட,கிழக்கு தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை விஸ்தரித்தல் உள்ளிட்ட விடயங்களில் தமது தொடர்தேச்சியான பங்களிப்பு இருக்கும் என்றும் அவர்(ஜெய்சங்கர்) உறுதிபடத் தெரிவித்தார்.

இதேவேளை, வட,கிழக்கில் உள்ள போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பில் அதிக சிரத்தையினை இந்தியா கொண்டிருப்பதோடு அவர்களுக்கான உதவித்திட்டங்கள் உள்ளிட்ட மேம்பட்ட பல விடயங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதுபற்றிய விடயங்களில் கூட்டமைப்பின் பரிந்துரைகளையும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பலாலி,காங்கேசன்துறை விவகாரம், இறுதியாக பலாலி, காங்கேசன்துறை தொடர்பில் நாம் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தோம். விசேடமாக பலாலியில் உள்ள யாழ்.சர்வதேவ விமானநிலையில் இயங்காத நிலையில் இருப்பதும், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் அதனுடன் சார்ந்த அப்பிரதேச முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொடர்பில் எமது கோரிக்கைகளை அவருக்கு விரிவாக தெரிவித்தோம்.

அதன்போது, தாம் இந்த இரண்டு விடயங்கள் சம்பந்தமாகவும் அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருப்பதாகவும், யாழ்;ப்பாணத்திற்கும், இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்தை விரைவில் மீள செயற்படுத்துவற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார் என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

TELO Admin