Hot News
Home » செய்திகள் » நல்லூர் பிரதேச சபைக் காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நல்லூர் பிரதேச சபைக் காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

திருநெல்வேலி பாற்பண்ணைக்கு முன்பாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி படையினர் கைப்பற்றியுள்ளனர்.  இந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என நல்லூர் பிரதேசசபை அண்மையில் கூடி விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய நிலையில் நேற்றுக்காலை படையினர் இந்த காணியை கைப்பற்றியுள்ளனர்.நேற்றுக்காலை அங்கு சென்ற படையினர் அங்கிருந்த காவலாளியைத் துரத்திவிட்டு காணியின் வாசல் கேற்றை மூடிப் பூட்டுப் போட்டதுடன் அதற்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கினர்.பிரதேச சபையின் காணி என்று ஏற்கனவே அடையாளமிடப்பட்டிருந்த போதும் நேற்றுக்காலை படையினர் அத்துமீறி அங்கு வந்து அதனைக் கையகப்படுத்தியதாக நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.பாற்பண்ணைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த 5.5 பரப்புக் காணியில் சிறுவர் பூங்கா ஒன்று அமைப்பதற்கு சபை தீர்மானித்தது. இதனையடுத்து அங்கு பூங்கன்றுகளும் நாட்டப்பட்டன. அத்துடன் நல்லூர் பிரதேச சபைக்கு இந்தக் காணி சொந்தமானது எனத் தெரிவிக்கும் அடையாளப் பலகையும் போடப்பட்டிருந்தது. சிறுவர் பூங்காவுக்கான விளையாட்டு சாதனங்களும் அடுத்த சில தினங்களில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.இந்த நிலையில் நேற்றுக் காலை 9.15 மணியளவில் அங்கு சென்ற 5 இராணுவத்தினர் காவலாளியைத் துரத்திவிட்டு தாங்கள் கொண்டு சென்ற பூட்டினால் கேற்றைப் பூட்டி இராணுவப் பாதுகாப்பும் போட்டனர். இதுகுறித்துக் காவலாளி நல்லூர் பிரதேச சபைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினார். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற தலைவரும், உத்தியோகத்தர்களும் அங்கு நின்ற படையினரிடம், இது பிரதேச சபைக்குச் சொந்தமான காணி என்பதை விளங்கப்படுத்தினர். எனினும் படையினர் அதனைக் கேட்கவில்லை. ஊரெழுப் படைமுகாமில் இருந்து திருநெல்வேலி முகாம் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர்கள் பிரதேச சபைத் தலைவரிடம் தெரிவித்தனர்.இதனை அடுத்து கோப்பாய் காவற்துறை நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்றைத் தான் பதிவு செய்யச் சென்றதாகவும் தனது முறைப்பாட்டை ஏற்க மறுத்த காவற்துறையினர், சம்பந்தப் பட்ட காணி இராணுவத்துக்கு உரியது என அரச அதிபரால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் எதுவும் செய்ய முடியாது எனவும் இதுகுறித்து அரச அதிபருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியதாக தலைவர் வசந்தகுமார் கூறியுள்ளார்.இந்தக் காணி யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபையால் 2003 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை குறித்துத் தான் அரச அதிபருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பலாலிப் படைத்தலைமையக ஊடகத் தொடர்பாளர் மேஜர் மல்லவராய்ச்சி, அது இராணுவத்துக்கு உரிய காணி. பிரதேச சபைக்குச் சொந்தமானது அல்ல. அதனால்தான் இராணுவத்தினர் நேற்று அங்கு சென்றனர் என தெரிவித்துள்ளார்.இந்தக் காணி அரச அதிபரால் இராணுவத்துக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆகவே இது தொடர்பில் அரச அதிபருடன்தான் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியிட்ட யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் காணியை அவ்வாறு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.

TELO Admin