இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.2009ம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்க நார்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்ட்த்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்ட்தாகவும், இந்த பிப்ரவரி கோலாலம்பூர் கூட்டத்தில், புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது, ஆனால் எழுத்து மூலமாக எந்தத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை, எனவே அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது என்றார் ருத்ரகுமாரன். அக் கூட்டத்தில் ஒரு விரிவான போர் நிறுத்தம் குறித்து விடுதலைப் புலிகள் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சார்க் மாநாட்டை ஒட்டி 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வார கால அளவுக்கு ஒருதலைப் பட்ச போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தும் அதை நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று கூறிய யோசனைகளை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் ரத்தக் களறியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று கூறுவது ஏற்கத் தக்கது அல்ல என்றும் அவர் கூறினார். இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் புலிகள் சரணடைந்திருந்தால் கூட அதை தவிர்த்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார். இலங்கை அரச படைகள் வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியது, மருத்துவ மனைகளில் குண்டு வீசியது போன்ற நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன என்றார் அவர்.