Hot News
Home » செய்திகள் » அரசின் கண்ணுக்கு புலப்படாத இரு அகதி முகாம்கள்

அரசின் கண்ணுக்கு புலப்படாத இரு அகதி முகாம்கள்

கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப் பொமக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் நலன்புரி முகாம்கள் இனி இல்லை எனவும் அரசாங்கம் கூறித்திரிவதில் எந்தவொரு உண்மையும் இல்லை  என்றே எண்ணத் தோன்றுகிறது. 1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் அவர்கள் வவுனியாவின் பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அக்காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஆரம்ப காலத்தில் அம்மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வந்தது. அத்துடன், பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் இம்மக்களுக்கான உதவிகளைச் செய்தது. காலப்போக்கில் குறித்த இரு முகாம்களையும் சேர்ந்த பொதுமக்கள் சிலர் படிப்படியாக அவரவர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கும், மேலும் சிலர் இந்தியாவுக்கும் சென்று குடியேறினர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து மேற்படி முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறி சொந்த இடங்களுக்குச் செல்லுமாறும், நலன்புரி முகாம்களை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால் முகாம்களிலுள்ள மக்களுக்கு எந்தவொரு உதவியும் வழங்கப்பட மாட்டாது எனவும் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட செயலகத்துக்குச் சென்றுள்ள முகாம் மக்கள், தங்களது சொந்த காணிகளும் வீடுகளும் யுத்தத்தால் முழுமையாக அழிவடைந்துள்ளன என்றும் அதனால் தங்களுக்கு போக்கிடம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட செயலகத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் அம்மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுப்பதாகவும் அதனால் அப்பிரதேசங்களுக்குச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்படி இரு முகாம்களைச் சேர்ந்த ஒருதொகுதி குடும்பங்கள் அரசாங்கம் வழங்கிய காணிகளுக்குச் சென்று மீள்குடியேறியுள்ளன. இருப்பினும் மற்றுமொரு தொகுதியினர், தங்களால் அப்பிரதேசங்களுக்குச் செல்ல முடியாது என்று கூறி முகாம்களிலேயே தங்கியுள்ளனர். பல வருடங்களாக வவுனியா நலன்புரி முகாம்களிலேயே தங்கியுள்ளதால், அங்கிருந்தவாறு கூலி வேலைகளைச் செய்து தமது பிள்ளைகளைப் படிக்கவைக்க முடிகின்றது என்றும், அரசாங்கம் பெற்றுக்கொடுத்த காணிகளுக்குச் சென்றால் கூலி வேலைகளுக்குக்கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், இதனால் தங்களது பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் என்றும் முகாம்களிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அரசாங்கம் தங்களுக்கு வவுனியா பிரதேசத்திலேயே காணிகளைப் பெற்றுக்கொடுத்து அங்கு தங்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்றும் அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பில் தங்களது முகாம்களுக்கு வந்த அரசாங்க அதிகாரிகளிடம் பலமுறை வேண்டுகோள்களை முன்வைத்த நிலையில் அவர்களும் தங்களுக்கு வவுனியாவிலேயே காணிகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர் என அம்முகாமிலுள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இருந்த போதிலும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அம்மக்கள் குறிப்பிட்டனர். வவுனியாவின் பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு நலன்புரி முகாம்களில் தற்போது சுமார் 502 குடும்பங்கள் எஞ்சியுள்ளனர். இதில் 217 குடும்பங்கள் பூந்தோட்டம் நலன்புரி முகாமிலும் 285 குடும்பங்கள் சிதம்பரபுரம் முகாமிலும் தங்கியுள்ள நிலையில், அரசாங்கத்தினாலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களினாலோ எந்தவித உதவிகளோ அல்லது சலுகைகளோ தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் தாங்கள் அரச அதிகாரிகளிடம் வினவியபோது, நலன்புரி முகாம்கள் மூடப்பட்டுள்ளதால் எந்தவொரு உதவிகளும் இனி வழங்கப்படுவதில்லை என அவ்வதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் அம்மக்கள் குறிப்பிடுகின்றனர். அன்றாடம் கூலி வேலைகளுக்குச் சென்றே தங்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் தங்கள் குறித்து எவரும் கரிசனை காட்டுவதில்லை என்றும் அம்மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இந்நிலையில், இவ்விரு முகாம்களிலுள்ள மக்கள் தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திரவிடம் கேட்டபோது, இந்த மக்கள் அரச அனுமதியின்றியே குறித்த பிரதேசத்தில் குடியிருக்கின்றனர் என்றும் அவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை தாம் முல்லைத்தீவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் அவர்கள் அங்கு செல்ல மறுக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.அத்துடன், இவர்கள் இடம்பெயர் மக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரப்படாதவர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு அரசாங்கம் எந்தவித கொடுப்பனவுகளையோ சலுகைகளையோ வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இம்மக்கள் கோரும் இடத்தை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியே தீர்மானிக்கும் என்றும் வவுனியா மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும், சர்வதேச ரீதியில் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும், இலங்கையில் இனி நலன்புரி முகாம்கள் இல்லை என்று மார்தட்டிக்கொண்டாலும் சுமார் 15 வருடங்களாக முகாம் வாழ்க்கையையே வாழ்ந்து வரும் ஒரு தொகுதி மக்களும் இருக்கின்றார்கள் என்பதை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேசமயம், நலன்புரி முகாம்கள் இலங்கையில் இனி இல்லை என்ற கருத்தை உண்மையாக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் அரசாங்கம் களமிறங்க வேண்டும். 15 வருட முகாம் வாழ்க்கை வாழும் இந்த பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் மக்களுக்கு மறுவாழ்வளிக்க அரசாங்கமும் உரிய தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அம்மக்களினதும் எதிர்ப்பார்ப்பாகும்.

TELO Admin