Hot News
Home » செய்திகள் » ஆணையாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆளுங் கட்சியே காரணம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஆணையாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆளுங் கட்சியே காரணம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

யாழ். மாநகர ஆணையாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆளுங் கட்சியின் அரசியல் செல்வாக்கே காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.”சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றி வந்த ஒரு மனிதரை அரசியல் செல்வாக்கு மூலம் பழிவாங்கியுள்ளனர். யாழ் மாநகர சபையின் ஊழல்களை அவர் ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலேயே இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ)தின் மாநகர உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வட மாகாணத்தில் திணைக்கள அதிகாரிகளை இப்படி திடீரென இடமாற்றும் நிகழ்வுகளால்; துறைசார் திணைக்கள அதிகாரிகள் மத்தியில் இப்போது குழப்ப நிலையும் அச்ச நிலைமையும் ஏற்;பட்டு வருகின்றது.  இவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.பிரணவநாதன் ஆணையாளராக பொறுப்பேற்ற பின்பு மாநகர உள்ளக துறைசார் திணைக்களங்களுக்கு அதிகாரங்களை உரிய முறையில் பகிர்ந்தளித்து சுதந்திரமான நீதியான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தவர். வரி, வாடகை அறவீட்டுச் செயற்பாடுகளைச் சீர்செய்து ஏல விற்பனை முறைகளை ஒழுங்குபடுத்தி மாநகர சபைக்கு அதிக வருமானம் வரக்கூடிய வியூகங்களை வகுத்து உத்வேகத்துடன் செயற்பட்டவர். மாநகர சபைக்குள் ஊழல், முறைகேடு, துஸ்பிரயோகம் ஏதும் இடம்பெறாமல் விழிப்பாகச் செயற்பட்டு வந்தவர். அவர் முற்றாக அரசியல் சார்ந்த செயற்பாடுகளையும் தவிர்ந்து வந்தவர்.  இவரது சேவை, திறமை, தகுதி அடிப்படையில் பெற்று வந்த புள்ளிகளின் அடிப்படையில்  இவர் ஜப்பான் நாட்டுக்குச் சென்று புலமைப்பரிசிலில் தோற்றுவித்து பட்டம் பெறும் வாய்ப்பும் கிட்டியிருந்தது. இத்தகைய இடமாற்றத்தினால் இவருக்குரிய வாய்ப்புக்கள் ஒரு பெரும்பான்மையினத்தை சேர்ந்த அதிகாரிக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக மீளவும் ஆணையாளராக நியமிப்பதற்கு ஆளும்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.  இதற்கு எதிர்க்கட்சியினரான நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” என்றார்.

இது தொடர்பாக யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவை தொடர்புகொண்ட போது,

“அரச அதிகாரிகளுக்கான இடமாற்றம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது அரசியல் காரணங்களுக்காக இடம்பெறவில்லை.ஊழல் தொடர்பாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் பிரணவநாதனை ஆணையாளராக நியமித்தால் ஊழல் குற்றச்சாட்டை ஆளும் தரப்பு ஏற்றுக்கொண்டு விடும். இதனால் மீண்டும் அவரை ஆணையாளராக ஏற்றுக்கொள்ளமாட்டேன்”  என்றார்.

TELO Admin