Hot News
Home » செய்திகள் » “நீதித்துறையின் சுதந்திரம் 1978ஆம் ஆண்டே பறிபோனது”

“நீதித்துறையின் சுதந்திரம் 1978ஆம் ஆண்டே பறிபோனது”

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை 1978ஆம் ஆண்டு ஜே ஆர் ஜெயவர்தன ஆட்சியின் போது அமலுக்கு வந்த புதிய அரசியல் சட்டத்துடன் பறிபோனதாக இலங்கையின் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார்.கடந்த இரு நாட்களாக இலங்கையில் நடந்த நீதித்துறை போராட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமான்கள் கவுன்சில் இலங்கையின் நீதித்துறையின் நிலை குறித்து விடுத்த அறிக்கையின் பின்னணியில், இலங்கையில், ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய அளவுக்கு, சுயாதீனத் தன்மையுடன் நீதித்துறை செயல்பட முடிகிறதா என்று கேட்டதற்கு, 1977 ஆண்டுக்கு முன்னர் சுதந்திரமாக செயல்பட்ட நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, 1978 ஆம் ஆண்டு அமல் படுத்தப்பட்டது முதல் தனது சுதந்திரத்தை இழந்துவிட்டது என்றார் விக்னேஸ்வரன்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை என்பது அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி என்ற ஒரு நபரிடம் குவித்த நிலையில், ஜனநாயகத்தில், நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் அதிகாரவர்க்கம் என்று சொல்லப்படுகின்ற மூன்று முக்கிய துறைகளுக்குமிடையே இருக்கவேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் சமப்படுத்தல்களை அகற்றி விட்டது என்றார் விக்னேஸ்வரன்.இந்த நிலைமையை ஓரளவுக்கு 17வது அரசியல் சட்டத்திருத்தம் சரி செய்தது என்றும் ஆனால் அந்த சட்டத்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியல் சட்ட கவுன்சிலை பின்னர் வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு இயங்கவிடாமல் செய்துவிட்டது என்றார் அவர்.இப்போது நிலைமை சரியாக்கப்பட்டு, நீதித்துறை சுயாதீனமாக செயல்படவேண்டுமென்றால், இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அகற்றப்படவேண்டும் என்றார் விக்னேஸ்வரன்.

TELO Admin