Hot News
Home » செய்திகள் » இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கவே த.தே.கூட்டமைப்பிற்கு இந்தியா அழைப்பு: ஜா. ஹெ. உ.

இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கவே த.தே.கூட்டமைப்பிற்கு இந்தியா அழைப்பு: ஜா. ஹெ. உ.

இலங்கை அரசாங்கத்தை தீண்டிப் பார்த்து நவம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்திய விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்திய அரசு விடுத்ததென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியது. இதற்கு இலங்கை அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் இந்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்றும் ஹெல உறுமய தெரிவித்தது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் தெளிவுபடுத்துகையில், இந்தியாவின் மத்திய பிரதேசத்திற்கான எமது ஜனாதிபதியின் விஜயத்திற்கு வை.கோ தலைமையில் கடும் எதிர்ப்பலைகள் தோன்றின. பின்னர் மத்திய பிரதேசத்திற்கு இக்குழு நேரடியாகச் சென்று ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டன. எமது ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பிலும் கடும் சர்ச்சைகள் உருவாகின. இது இலங்கையை அசௌகரியங்களுக்குள் தள்ளிவிடும் திட்டமிட்ட நடவடிக்கைகளாகும். ஜனாதிபதியின் விஜயத்தின் பின்னர் இந்திய மத்திய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்து அங்கு சென்ற கூட்டமைப்பினருக்கு ராஜதந்திர வரவேற்பு மரியாதையை வழங்கியுள்ளது. இலங்கையின் சாதாரண ஒரு தமிழ் அரசியல் கட்சிக்கு இந்தியாவில் ராஜதந்திர வரவேற்பை வழங்குவதை கடுமையாக எதிர்க்கின்றோம். தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் உள்ளனர். அவ்வாறானதோர் நிலையில் கூட்டமைப்பிற்கு மட்டும் ஏன் இந்த ராஜதந்திர வரவேற்பு. இது எமது நாட்டின் இறைமையை மீறும் தலையீடாகும். ஒற்றையாட்சியை ஆதரிக்காத சமஷ்டி முறையை ஆதரிக்கும் கூட்டமைப்பை வரவேற்பது எமது நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். இந்தியா எமது நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுகிறது. இலங்கையை தீண்டிப்பார்த்து இந்தியா, ஸ்பெயின்,கண்காணிப்பில் இடம்பெறவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளி எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வைக்கவே இந்தியா திட்டமிடுகிறது. எமக்கெதிரான இந்தியாவின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இரு நாட்டு நட்புறவில் விரிசல்கள் ஏற்படும் ஆபத்திருக்கின்றது. அத்தோடு கூட்டமைப்பிற்கு இவ்வாறு அழைப்பு விடுத்து ராஜதந்திர அந்தஸ்தை வழங்குவதற்று எதிராக அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

TELO Admin