Hot News
Home » செய்திகள் » தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்.இரா.சம்பந்தன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். “இந்த கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாக கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசாங்கம் உறுதிமொழி அளித்த போதிலும், வழக்குகள் இதுவரை தொடங்கப்படவில்லை. அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றால் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யாமல் எதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இது மனிதஉரிமைகள் தொடர்பான தீவிரமான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்து மகர சிறைக்கு மாற்றப்பட்ட அரசியல் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர். பல கைதிகள் படுகாயமடைந்தனர், ஒருவர் கோமா நிலையில் உள்ளார். இன்னொருவர் காயங்களினால் உயிரிழந்துள்ளார். சிறை அதிகாரிகள் இறந்தவரின் உடலையோ அவரது பிரேத பரிசோதனை அறிக்கையையோ உறவினர்களிடம் கையளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. பிரேத பரிசோதனை ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அதனை வழங்க மறுக்கின்றனர். இறந்தவரின் இறுதிச்சடங்கைக் கூட செய்யும் உரிமையில்லாத இந்த நிலை இது மிகவும் மோசமானது.” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தமிழ் அரசியல் கைதி ஒருவர் சிறைச்சாலையில் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தமிழ் அரசியல்கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர். கணேஸ் நிர்மலரூபன் என்ற அரசியல் கைதி வவுனியா சிறைக்குள் தாக்கப்பட்டதால் படுகாயமடைந்து, கடந்த புதன்கிழமை மகர சிறையில் மரணமானார். இதுதொடர்பாக அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஒஸ்ரியா, போன்ற நாடுகளின் தூதுவர்களை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்புகளில் இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், மனோ கணேசன், குமரகுருபரன், மற்றும் மனித உரிமைசெயற்பாட்டாளர்களான நிமல்கா பெர்னான்டோ, செரின் சேவியர் ஆகியோரும் பங்கேற்றனர்.

TELO Admin