Hot News
Home » செய்திகள் » நாட்டின் அபிவிருத்திக்கு சர்வாதிகாரம் தேவையில்லை; ஜனநாயகமும் ஒழுங்குமுறைகளுமே அவசியம்

நாட்டின் அபிவிருத்திக்கு சர்வாதிகாரம் தேவையில்லை; ஜனநாயகமும் ஒழுங்குமுறைகளுமே அவசியம்

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை. அதற்கு, எமக்கு ஜனநாயகமும் ஒழுங்கு முறைகளுமே அவசியம் என என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மூன்று பிரதான கட்சிகளின் தலைமையிலும் புதிய கூட்டணிகள் உருவாகவுள்ளன. இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிக்கப்படும்.

அத்துடன் நாங்கள் யாரையும் ஒழித்துக் கட்டவில்லை. வெள்ளை வான் அச்சுறுத்தல்கள் அற்ற, நீதித்துறை மீதான நெருக்குதல் இல்லாத ஜனநாயக ரீதியான புதிய நாட்டை உருவாக்கவே எதிர்பார்க்கிறோம். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் எமக்கு சர்வாதிகாரம் வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை. அதற்கு, எமக்கு ஜனநாயகமும் ஒழுங்குமுறைகளுமே அவசியம். இவை இரண்டினூடாகவே முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிக்கும் வைபவம் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று (08) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.