Hot News
Home » செய்திகள் » புதிய தளபதி நியமனத்தால் சிறிலங்கா கடற்படைக்குள் முறுகல் – றியர் அட்மிரல் வீரசேகர முன்கூட்டியே ஒய்வு

புதிய தளபதி நியமனத்தால் சிறிலங்கா கடற்படைக்குள் முறுகல் – றியர் அட்மிரல் வீரசேகர முன்கூட்டியே ஒய்வு

வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து உயர்மட்டத் தளபதிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா கடற்படையின் தொண்டர் படைகளின் தளபதியான றியர் அட்மிரல் துசித வீரசேகர முன்கூட்டியே ஓய்வுபெற்றுச் செல்கிறார். வைஸ் அட்மிரல் கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதும், இவர் ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்தள்ளார். இவர் ஒய்வுபெறுவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற போதிலும், புதிய தளபதி நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் முன்கூட்டியே ஓய்வுபெற முடிவு செய்துள்ளார்.முன்னதாக இவர் வடக்கு கடற்படைத் தளபதியாகவும், பிரதித் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய போது, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்கவுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுண்டிக்குளத்தில் நான்கு சிறிலங்கா கடற்படையினர் காணாமற்போனதை அடுத்து இந்த இரு பதவிகளிலும் இருந்து றியர் அட்மிரல் துசித வீரசேகர நீக்கப்பட்டு தொண்டர் படைகளின் தளபதியாக மாற்றப்பட்டார். கடற்படையினர் காணாமற்போனது தொடர்பான விசாரணைகளின் போது இவர் மீது குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத போதிலும், அவருக்கு பழைய பதவிகள் மீள வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா கடற்படையில் ஏற்கனவே, தலைமை அதிகாரி, பிரதி தலைமை அதிகாரி ஆகிய பதவிகளுக்கு எவரும் நியமிக்கப்படாமல் நீண்டகாலமாகவே வெற்றிடம் இருந்து வருகிறது. புதிய தளபதி நியமனத்தை அடுத்து கிழக்கு கடற்படை தளபதி பதவியும், றியர் அட்மிரல் துசித வீரசேகரவின் ஓய்வினால் ஏற்படும் தொண்டர் படைகளின் தளபதி பதவியும் தற்போது வெற்றிடமாகியுள்ளன.

TELO Admin