Hot News
Home » செய்திகள் » போர்க் குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவை: மாக்ஸ்வெல் பரனகம

போர்க் குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவை: மாக்ஸ்வெல் பரனகம

இலங்கையில் புலிகளுடனான யுத்தத்தின்போது, ராணுவம் போர்க் குற்றங்களை இழைத்தது என்ற குற்றச்சாட்டுகள் “நம்பத்தகுந்தவை” என இது குறித்து விசாரிக்க அரசு நியமித்த ஒய்வு பெற்ற நீதிபதி மாக்ஸ்வல் பரனகம கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக அரசு நியமித்த முதலாவது ஆணையத்திற்கு அவர் தலைமையேற்றிருந்தார்.

இது குறித்து மேலும் விசாரிப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்கக் குழு ஒன்றை அமைக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே உறுதியளித்திருந்தார்.

26 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் குறைந்தது ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சியும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட பல்வேறு கொடுமைகளைப் பதிவுசெய்திருந்தன. போரின் கடைசி ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஒரு விசாரணையில் தெரியவந்தது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என வேறு சில ஆதாரங்கள் தெரிவித்தன.

வெள்ளைக் கொடி விவகாரம்

நீதிபதி மாக்ஸ்வெல் பரனகமவின் அறிக்கை செவ்வாய்க் கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அரசால் தாக்கல் செய்யப்பட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தைச் சேர்ந்த சிலர் போர்க் குற்றம் என்று சொல்லக்கூடிய செயல்களைச் செய்திருக்கிறார்கள் என நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.

“நோ ஃபயர் ஜோன்” ஆவணப்படத்திற்காக சேனல் 4 தொலைக்காட்சிக்குக் கிடைத்த, “கைதிகள் நிர்வாணமாக, கண்களும் கைகளும் கட்டப்பட்டு, வீரர்களால் சுடப்படும் காட்சிகள்” உண்மையானவை என்று நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

இந்த ஆவணப் படம் வெளிவந்த தருணத்தில், அது ஒரு கட்டுக்கதை என இலங்கை ராணுவம் அதனை நிராகரித்தது.

வெள்ளைக் கொடி வழக்கு என்று அழைக்கப்பட்ட விவகாரத்தில், 2009ஆம் ஆண்டு மே மாதம் சரணடைந்த மூத்த தமிழ் தலைவர்கள் கொல்லப்பட்டது குறித்தும் விசாரிக்க வேண்டுமென பரனகம ஆணையம் தெரிவித்திருக்கிறது.

சர்வதேச ஆதரவுடன் கூடிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் நீதிபதி பரனகம தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் வெளியான ஐ.நா. அறிக்கையிலும் இதுவே பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

போரின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக 2013ல் அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச ஒரு ஆணையத்தை நியமித்தார்.

போரின் இறுதிக் கட்டத்தின்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச, ராணுவம் போர்க் குற்றங்கள் எதையும் செய்யவில்லையென்று கூறியதோடு, சர்வதேச விசாரணைகளுக்கும் மறுத்துவந்தார்.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா.வின் அறிக்கையில் இரு தரப்பின் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

2002க்கும் 2011க்கும் இடையில் இரு தரப்பும் சட்டவிரோதமாக பல கொலைகளைச் செய்தன என்று கூறப்படுகிறது.

கடந்த சில தசாப்தங்களாகவே, ஆட்கள் காணாமல் போவது என்ற விவகாரம் பல ஆயிரம் பேரைப் பாதித்திருக்கிறது.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பாதுகாப்புப் படையினரால், சித்ரவதை கடுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிடித்துவைக்கப்பட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினரால் பெரும் அளவில் பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பெண்களைப் போலவே ஆண்களும் இதற்கு உள்ளாக்கப்பட்டனர்.

பெரியவர்களையும் குழந்தைகளையும் வலுக்காட்டாயமாக புலிகள் படையில் சேர்த்தனர். குறிப்பாக போரின் இறுதிக் கட்டத்தில் இது நடந்தது.

வடகிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில், போரின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.

அரசுப் படையினர் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசியதால் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது என குற்றம்சாட்டப்படும் அதே நேரத்தில் புலிகளும் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். தப்பிச் செல்ல முயல்பவர்களைச் சுட்டுக்கொன்றனர்.

புலிகளின் தலைவர்கள் சரணடைந்த பிறகோ, அல்லது பிடிக்கப்பட்ட பிறகோ ராணுவம் அவர்களைச் சுட்டுக்கொன்றது என்ற குற்றச்சாட்டு இப்போதுவரை நீடிக்கிறது. பொதுமக்களைப் பாதுகாக்க, தான் கூடுதலாகச் செயல்பட்டிருக்க வேண்டுமென்பதை 2012ஆம் ஆண்டில் ஐநா ஒப்புக்கொண்டது.

முல்லைத் தீவு பகுதிக்கு அருகில் நடந்த இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலரை இன்னும் காணவில்லை.

TELO Admin