Hot News
Home » செய்திகள் » இலங்கையின் வட மாகாணசபைத் தேர்தல் 2013 செப்டம்பரில் என மஹிந்த குறிப்பிட்டுளமை ஒரு சதி – இந்து

இலங்கையின் வட மாகாணசபைத் தேர்தல் 2013 செப்டம்பரில் என மஹிந்த குறிப்பிட்டுளமை ஒரு சதி – இந்து

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் வட மாகாணசபைத் தேர்தல் 2013ஆம் வருட செப்டம்பரிலேயே நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு 30 வருடகால தேர்தல் இடாப்புகளை சரிப்படுத்த அரசுக்குக் கால அவகாசம் தேவை எனக் காரணம் கூறியுள்ளார்.இந்த இழுத்தடிப்பு ஒரு சதி நடவடிக்கையாகும் என இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘இந்து’ அதன் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த செய்திப் பத்திரிகைக்கு (இந்து) பேட்டியொன்றை அளித்திருந்தார். அதில் இலங்கை வட பகுதி மாகாணசபைத் தேர்தல்கள் 2013ஆம் வருட செப்டம்பரில் நடத்தப்படும். 30 வருடகால பழைமையான வாக்காளர் இடாப்புகளில் இன்னும் பதியப்படவேண்டியவர்கள் உள்ளார்கள்.

இதற்காக அரசுக்குக் கால அவகாசம் தேவை என அவர் காரணம் கூறியிருந்தார். கால தாமதத்துக்கான இவரது வியாக்கியானம் ஒரு சதிச் செயலையே பிரதிபலிக்கிறது. 009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

இதற்குப் பின்னர் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2010ஆம் வருட ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2010ஆம் வருட ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. வடமாகாண வாக்காளர்கள் இந்த மூன்று தேர்தல்களிலும் பங்குபற்றியிருக்கிறார்கள்.

இந்த மூன்று தேர்தல்களின் போதும் பழைய வாக்காளர்கள் இடாப்புகள் பிரச்சினைக்குரியவையாக இருக்கவில்லை. இது ஒரு வெளிப்படையான விடயம்.  அதே போன்று புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் ஆகியவை சம்பந்தப்பட்ட முன்னெடுப்புகளும் இவற்றிற்குக் குந்தகமாக அமையவில்லை.

அதேவேளை, தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு ராஜபக்ஷவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிவாகை சூடியுள்ளது. மாகாணசபைத் தேர்தல்களிலும் இக்கூட்டமைப்பு வெற்றிவாகை சூடிவிடுமோ என்ற அச்சமே இந்த இழுத்தடிப்புக்குக் காரணமாக இருக்கக்கூடுமென மேற்படி கூட்டமைப்பே சந்தேகிக்கின்றது. போரினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை உள்ளடக்கிய வட மாகாணத்தில் அரசியல் முன்னெடுப்புகள் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஒரு முதலமைச்சரின் தலைமையின்கீழ் இயங்கும் ஒரு மாகாண அரசுக்கு இலங்கை அரசமைப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தின்கீழ் சில அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். எவர் வெற்றி பெறுகிறார் என்பது முக்கியமல்ல. பொதுமக்கள் ஜனநாயக அரசியல் அடிப்படையில் மாகாண அரசுக்கு அளிக்கப்படும் உதவி அப்பிராந்தியத்தில் மீள இயல்புநிலையைக் கட்டியெழுப்ப உதவும்.

யுத்தம் முடிவடைந்த பின்னரே காலதாமதமின்றி வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படியானால், சமாதானத்தை உத்தரவாதப்படுத்துவதற்காக அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அரசின் அக்கறையை அச்செயற்பாடு எடுத்துக்காட்டியிருக்கும். இதற்கு மாறாக, மூன்றாண்டுகளுக்கு மேலாக  வடக்கு இன்னும் இராணுவத்தின் பிடியிலேயே சிக்குண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கையின்படி மாகாண அரசொன்றைத் தேர்ந்தெடுக்க மேலும் 14 மாதங்கள் கடந்தாகவேண்டும்.

அதேவேளை, கிழக்கு மாகாணசபை உட்பட மூன்று மாகாணசபைகள் கலைக்கப்பட்டுவிட்டன. 2013ஆம் ஆண்டுவரை இவற்றின் கால எல்லை நீடிக்கிறது. எனினும், முன்கூட்டியே கலைக்கப்பட்டுவிட்டன. இவற்றிற்கான தேர்தல்கள் இவ்வருட செம்டெம்பரில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், வட மாகாணத்துக்கான தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவாரேயானால் அப்பகுதியில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் நடைபெறவேண்டுமென்ற நன்நோக்கத்தில் அவர் அப்பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முன்வரவேண்டும். இதை அவர் சிந்திக்க முனையவேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் அதனதன் பாதுகாப்புத் தேவைகளைத் தீர்மானிப்பதற்கான உரிமை உண்டு. விடுதலைப் புலிகளின் குந்தகமான திட்டங்களிலிருந்து விடுபடுவதற்கான இலங்கையின் வியூகம் சரியானதே. எனினும், தமிழ்ப் பகுதிகளின் மக்கள் தொகையை விட இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

ஜம்முவிலும், காஷ்மீரிலும் பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது வெளிச்சக்திகளில் மிரட்டலை முறியடிப்பதற்கான ஒரு நடவடிக்கை. இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை மக்களின் நாளாந்த சுமுக வாழ்க்கைக்குக் குந்தகமானது என்பதில் வியப்பில்லை. அதேவேளை, தேர்தலுக்கான காலத்தை அதி விரைவில் இலங்கை ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக அறிவிக்க முன்வரவேண்டும் என ‘இந்து’ அதன் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

TELO Admin