Hot News
Home » செய்திகள் » சுயேட்சை குழுவாக த.தே.கூ.போட்டியிட்டால் த.தே.ம.மு. ஆதரவளிக்கும்: கஜேந்திரகுமார்

சுயேட்சை குழுவாக த.தே.கூ.போட்டியிட்டால் த.தே.ம.மு. ஆதரவளிக்கும்: கஜேந்திரகுமார்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கூட்டமைப்பின் என்ற பெயரிலோ அதன் சின்னத்திலோ போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டால்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்காக பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

‘தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சியாகிய இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் மக்கள் முன்னணியாக தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணம், கூட்டமைப்பு 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதாகும்.

தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதானது எங்களின் விலகலுக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிட்டது. 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் இனம் போராடி பல இழப்புக்களுக்கு முகம் பொடுத்து வந்திருக்கின்றது. தற்போது தமிழ் இனத்தின் மீது சர்வதேசத்தின் பார்வை திரும்பியிருக்கின்றது.

இந்த நிலையில் மாகாண சபைத்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமாக இருந்தால் தேசியம் தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்பற்றை இழந்தவர்களாக பார்க்கப்பட வேண்டும். இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் தரக்கூடியதாக அமைந்துவிடாது.

மாறாக தேர்தலில் போட்டியிடகின்றவர்களுக்கு பதவியும் சம்பளத்தை மட்டுமே இந்த மாகாண சபையினால் வழங்க முடியும். அதிகாரங்கள் யாவும் ஆளுனருக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின். இந்தக் காரணங்கள் யாவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அலல். அவை யாவும் பொய்யான காரணங்கள.

 அதாவது அரசுடன் இணைந்து போட்டியிடும் கட்சிகள் வெல்லக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைப்பீடம் தெரிவித்து வருகின்றது. அவ்வாறு அந்தக்கட்சிகள் வெல்லக்கூடாது என்று நினைத்தால் சுயேட்சையாக போட்டியிட்டால் எங்கள் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக இறங்கிவேலை செய்வதற்கு தயாராக இருக்கின்றது.

இத்துடன் இந்தத் தேர்தல் மூலம் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு சாத்திக்கூறுகள் இருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது.

மாகாண சபை இணைப்பை மேற்கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருக்கின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைப் நாடாளுமன்றத்தில் 14 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மாகாணசபை இணைப்பு என்பது சாத்தியப்படாதா ஒன்று. எனவே தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியலை சுயேட்சைக்குழுவாக பதிந்து போட்டியிடுமாறு கேஞ்சிக்கேட்டுக்கொள்கின்றோம்’ என்றார்.

இந்த  ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் மணிவண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டர்.

TELO Admin