Hot News
Home » செய்திகள் » `எழுக தமிழ்` காலத்தின் தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக செயற்படாது

`எழுக தமிழ்` காலத்தின் தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக செயற்படாது

எழுக தமிழ் நிகழ்வின் நோக்கங்களுடன் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அது காலத்தின் தேவையான நிகழ்வு. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக செயற்படாது. இப்படித் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்தியர் பூ.லக்ஸ்மனிடம் நேற்று (12) தொலைபேசி வழியாக, இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளார்.

எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்துடன், தமிழ் மக்கள் பேரவையினர் பல்வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் தங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பூ.லக்ஸ்மன்.

எழுக தமிழின் நோக்கங்களை குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதை ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த இரா.சம்பந்தன், “எழுக தமிழ் நிகழ்வின் நோக்கங்களுடன் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அது காலத்தின் தேவையான நிகழ்வு. எனினும், அதன் ஏற்பாட்டு குழுவிலுள்ள சில அமைப்பு ரீதியான விவகாரங்களாலேயே அதை பகிரங்கமாக ஆதரிப்பதில் எமக்கு தயக்கம் உள்ளது. ஆனாலும், எழுக தமிழ் போன்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும். அதை நாம் ஆதரிக்கிறோம். அதில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு அடுத்த சில நாட்களில் கலந்துரையாடி, ஒரு முடிவை உங்களிற்கு அறிவிக்கிறோம்“ என்றார்.

தமிழ் மக்கள் பேரவையின் தலைமை பதவியில் விக்னேஸ்வரன் தொடர்ந்து நீடிப்பதையே, சம்பந்தன் அப்படி நாசூக்காக குறிப்பிட்டார்.

இதே வேளை, எழுக தமிழ் நிகழ்வில் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் தமிழ் மக்கள் பேரவையினர் சந்தித்து பேசினர்.

எழுக தமிழிற்கு தாம் எதிரானவர்கள் அல்ல. எனினும், தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஒரு கட்சி தலைவர் தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில் நீடிக்கும் நிலையில், எழுக தமிழில் நாம் பங்கேற்பது பொருத்தமானதா என்ற குழப்பம்தான் எம்மிடமுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.