Hot News
Home » செய்திகள் » சீனாவுக்கு வாய்ப்பளிப்பதால் பறிபோகும் கிழக்கு

சீனாவுக்கு வாய்ப்பளிப்பதால் பறிபோகும் கிழக்கு

சீனாவின் முழுப்பங்களிப்புடன் செய்யத் திட்டமிட்டுள்ள இலங்கையில் பாரிய பொருளாதார முதலீட்டு வலயங்கள் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதனால் கிழக்கிலுள்ள பல ஆயிரக்கணக்கான  பாரம்பரிய மீனவர்களும் விவசாயிகளும் மறைமுகமாகத் தொழிலாளிகளாக மாற்றப்படுவார்கள் என தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் பயிற்சி இணைப்பாளர் பிரான்ஸிஸ் பிரியங்கர கொஸ்ரா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களை இந்த விடயத்தில் அறிவூட்ட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக நேற்று (17) கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஆட்சியாளர்கள் பெரும் பொருளாதார நலன்களை மாத்திரமே கொண்டு இயங்குவதால், மக்களின் அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றியோ, வாழ்விடப் பிரச்சினைகள் பற்றியோ அவர்கள் ஒருபோதும் சிந்திக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டளவில் நாட்டின் வடக்கில் தொடங்கி, கிழக்கை ஊடறுத்து, தெற்கில் முடியும் பெரும் பொருளாதார முதலீட்டு வலய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், சுமார் 86 இலட்சம் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு, தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்கப் போகின்றார்கள் என்கின்ற ஆபத்து நெருங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சீன நாட்டின் முழுப்பங்களிப்புடன் செய்யத் திட்டமிட்டுள்ள இந்தப் பாரிய அபிவிருத்தியின் கீழ், சீனாவிலிருந்தே தொழிலாளர்களும், வல்லுநர்களும் இறக்குமதி செய்யப்படவிருக்கின்றனர். ஆக ஒட்டு மொத்தத்தில் இந்தப் பாரிய முதலீட்டு அபிவிருத்தித் திட்டத்தால் சுமார் 80 சதவீதம் இலாபமடையப் போவது சீனாவும் இலங்கை அரசியல்வாதிகளுமே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.