Hot News
Home » தற்போதைய செய்திகள் » யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு

யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு

யாழ். மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இன்று இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் மேயர் இம்மானுவேல் ஆர்னால்ட் தலைமையில் நடைபெற்ற விசேட அமர்வில் 43 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 19 உறுப்பினர்களும் எதிராக 24 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 12 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முதலாம் வாசிப்பு கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்று 28 ஆம் திகதி முதலாவது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்போது, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 உறுப்பினர்களும் எதிராக 21 உறுப்பினர்களும் வாக்களித்ததுடன், 7 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் மாநகர சட்டம் 215 A இன் பிரகாரம் வரவு செலவு திட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என மேயர் தெரிவித்தார்.

இதற்கமைய, வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்ட நிலையில் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மாநகர மேயருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இரண்டு தடவைகள் வரவு செலவு திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டாலும் மேயரின் அதிகாரத்திற்கமைய, வரவு செலவு திட்டம் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டதாக மேயர் இம்மானுவேல் ஆர்னால்ட் அறிவித்தார்.