Hot News
Home » செய்திகள் » இன்னுமொரு சுமந்திரனே விக்னேஸ்வரன் – மயூரன் காட்டம்

இன்னுமொரு சுமந்திரனே விக்னேஸ்வரன் – மயூரன் காட்டம்

விக்னேஸ்வரனிற்கு போடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் இன்னொரு சுமந்திரனை உருவாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என வன்னி மாவட்ட வேட்பாளர் செ.மயூரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வன்னி தேர்தல் களத்தில் இன்று பலர் பல கட்சிகளில் போட்டியிடுகின்றனர். இதில் பெரமுனவில் போட்டியிடுகின்ற ஜனகநந்தகுமாரவுக்கு வன்னியில் வாக்களிப்பதற்கு தகுதியில்லை.

அதேபோல் மான் சின்னத்தில் போட்டியிடுகின்ற நீல் சாந்தவுக்கு வன்னியில் வாக்களிப்பதற்கு தகுதியில்லை. இவ்வாறாக பல வேட்பாளார்கள் இங்கு களம் இறக்கப்பட்டுள்ளனர். எனவே நீங்கள் வாக்களிக்கப்போகின்றவர்களுக்கு இங்கு வாக்குரிமை உள்ளதா என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.

இவர்கள் இறக்கப்பட்டதற்கான காரணத்தினை அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் வடக்கு கிழக்கு எமது தாயகப் பிரதேசத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் இருக்கின்ற நிலப்பரப்பு.

இந்த நிலையில் எமது பிரதிநிதித்துவத்தினையும் வாக்குரிமையையும் பறிப்பதற்காக தேசியக்கட்சிகள் ஊடாக சுயேற்சைக்குழுக்கள் ஊடாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அதனை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் எமது அரசியல்ரீதியான போராட்டத்தினை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர்.

இந்நிலையிலேயே எங்களோடு இருந்தவர்கள் எதிரணியில் இருக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மும்மொழியிலும் புலமை பெற்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு நல்ல எண்ணத்துடனே கொண்டுவந்திருந்ததோடு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை அவருக்கு வழங்கியிருந்தது.

ஆனால் அவர் இரா.சம்மந்தரின் இடத்திற்கு வர வேண்டும், தமிழ் மக்களுடைய தலைமைத்துவ இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்களுடன் இருந்து குழம்பி வெளியே சென்று விட்டார்.

2013ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் போது எனக்கு 28 வயது அன்றுதான் முன்னாள் முதலமைச்சர் விக்ணேஸ்வரனும் அரசியலுக்கு வந்தவர்.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக ஒரே வயதுதான். அவரும் 07 வருடம் நானும் 07 வருடம்தான் இதிலே வேறு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இன்று எங்களோடு பிரிந்து சென்றவர்கள் அவரை தலைமைத்துவவாதியாக காட்டுகின்றனர். குறிப்பாக எங்களோடு பிரிந்து சென்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதோடு அங்கு அவர்களுக்கு போதியளவு ஆசனங்கள் எடுக்காவிடின் அங்கும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதோடு அங்கிருந்து பிரிந்து சென்று விக்னேஸ்வரனை பேசுவார்.

பின்னர் கஜேந்திரகுமாருடன் இணைவார், அங்கும் ஆசனங்கள் கிடைக்காவிடின் அங்கிருந்தும் பிரிந்து சென்று கஜேந்திரகுமாரை பேசுவார்.

அவர்களுடைய பேச்சு தெற்கிலே இருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியையோ, சுதந்திர கட்சியையோ அல்லது பொதுஜன பெரவுன மீதோ எதிர்ப்பல்ல’ மாறாக தமிழ் மக்களுடைய ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான எதிர்ப்பும் விமர்சனங்களும் மாறிக்கொண்டு இருக்கின்றது.

விக்னேஸ்வரனுக்கு யாழ் மக்கள் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக மாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் இன்னொரு சுமந்திரனை உருவாக்கி விடுவீர்கள் என்ற பயத்துடன் அவர்களிற்கு வாக்களியுங்கள்.

நீங்கள் விக்னேஸ்வரனிற்கு போடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் இன்னொரு சுமந்திரனை உருவாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.