Hot News
Home » செய்திகள் » அன்புக்கும் மரியாதைக்குமுரிய தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஆசான் பொ.ஐங்கரநேசன் அவர்களுக்கு…..

அன்புக்கும் மரியாதைக்குமுரிய தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஆசான் பொ.ஐங்கரநேசன் அவர்களுக்கு…..

நல்லூர் பிரதேச சபையில் தங்கள் சுயேட்சை குழுவின் நிலைப்பாடு பற்றிய ஊடக அறிக்கையினை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருந்தேன். அது சம்மந்தமாக தங்களுக்கும் , தங்களையும் என்னையும் தீர்மானிக்கும் சக்தியான மதிப்பார்ந்த மக்களுக்கும் என் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதும் இப்போது தங்கள் அறிக்கையினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் புதிய த‌விசாளர் தேர்வுக்காக 30.12.2020 அன்று தமிழ் தேசியக் கூட்டமைபின் சார்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் என்னை வேட்பாளராக களமிறக்கியிருந்ததை மக்கள் நன்கறிவர்.

தவிசாளர் தெரிவில் கூட்டமைப்பினை ஆதரிக்கும் படி கூட்டமைப்பு சார்பிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் தலைவரும், தேசிய அமைபாளரும் தங்களினை கோரியிருந்தார்கள். எனினும் அந்த கோரிக்கையெல்லாவற்றினையும் நிராகரித்து நல்லூரில் கூட்டமைப்பினை தோற்கடித்த பின் கூட்டமைப்புக்கு எதிராக தாங்கள் தங்கள் உறுப்பினர் இருவரை வாக்களிக்க பண்ணியதற்கு புதிய வியாகியானங்களினை கூற முற்படுவது சற்றும் வேடிக்கையானதாகவே இருகிறது.

2018 இல் உள்ளூராட்சி தேர்தலின் பின் கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிசாளராக கெளரவ தியாகமூர்தி ஐயா அவர்கள் நிறுத்தப்பட்ட போது நீங்கள் அவரை ஆதரிக்கவில்லை, தமிழ் தேசிய மக்கள் முண்ணணி வேட்பாளர் கெளரவ வாசுகி அவர்களையே ஆதரித்திருந்தீர்கள்.
எனினும் தியாகமூர்த்தி ஐயாவே தவிசாளராக செயற்பட்டார். அவரது செயற்பாடுகளுக்கு உங்கள் உறுப்பினர்கள் ஆதரவு தந்தார்கள் என கூறினீர்கள் மதிபார்ந்த ஆசான் ஐங்கரநேசன் அவர்களே, ஆனால்
பின்னர் 2020ம் ஆண்டுக்கான பாதீடு 2019 டிசம்பர் 6ம் திகதி சபையில் சமர்பிக்கப்பட்ட போது தங்கள் குழுவை சார்ந்த உறுப்பினர் ஒருவர் காட்டமாக உரையாற்றி பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தார்.(தேவையெனின் ஆவணங்களினையும் சமர்பிக்க தயார்)
ஆனால் நீங்கள் கூறினீர்கள் “ஜனநாயக ரீதியாகப் பதவியொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயினும் வலுவான காரணங்கள் எதுவும் இல்லாமல் அரசியல் காழ்ப்பின் காரணமாகக் கவிழ்க்கக்கூடாது என்பது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு ” என்றும் முன்னாள் தவிசாளர் அவர்களுக்கு பூரண ஆதரவு வழங்கினீர்கள் என்றும் கூறியிருந்தீர்கள் , இது நீங்கள் கூறிய கூற்றுக்கும் தங்கள் உறுப்பினர் 2020 ஆண்டுக்கான பாதீடினை எதிர்த்ததும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
அந்த பாதீட்டை எதிர்க்க தங்களது ஆதரவும் இருந்ததாக அன்று சபையில் உங்கள் உறுப்பினர்கள் உட்பட பலரும் பேசிக்கொண்டார்கள்( அவர்களது பெயர்களை வெளியிடுதல் அரசியல் அறமில்லை என்பதால் கூறாமல் தவிர்கிறேன்)

2020ம் ஆண்டுக்கான பாதீட்டின் முத‌லாம் வாசிப்பு தோற்கடிக்கப்பட்டமைக்கு தங்கள் சுயேட்சை குழு காரணமாக அமைந்தது. அது தங்களுக்கும் தெரியாமலல்ல!
இரண்டாம் வாசிப்பு 2019 டிசம்பர் பின்பகுதியில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது கூட்டமைப்பு தோற்கக்கூடாது பாதீட்டினை எப்படியாவது வெற்றியளிக்க செய்யுங்கள் எமது அணி தவிசாளர் தோல்வியடையக்கூடாது முயற்சித்து வெல்ல வையுங்கள் என எனது கட்சி தலைவர் கெளரவ செல்வம் அடைகலநாதன் அவர்களாலும் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் அவர்களும் எனக்கும், எமது கட்சியை சேர்ந்த உப தவிசாளர் கெளரவ ஜெயகரன் அவர்களுக்கும் அரசியல் அறத்தின் பால் நின்று பணித்தார்கள். அதன் வாயிலாக நாம் இரண்டாம் வாசிப்பிலும் தோற்கவேண்டிய அதுவும் உங்கள் உறுபினர் வாக்களிப்பினாலேயே தோற்கவிருந்த பாதீட்டை அதன் இரண்டாம் வாசிப்பில் சுமார் 45 நிமிடத்திற்கும் மேல் பாதீட்டிலுள்ள சிறப்புக்களையும் அதை ஏன் தோற்கடிக்க முனைகிறீர்கள் எனவும் மக்களுக்கான பாதீடு வெற்றி பெற ஒத்துழையுங்கள் என நான் உரையாற்றி ஒரு மேலதிக வாக்கினால் வெற்றி பெற வைத்தோம். இது அரசியல் அறத்தின் பாலாகும்.(https://www.facebook.com/mathu.suthan.77/posts/1945542818910279) அப்போது உங்களால் வீழ இருந்த தமிழரசை தூக்கி நிறுதினோம்.
அப்போதும் உங்களினை நாம் பொதுவெளியில் நாகரீகம் கருதி விமர்சிக்கவில்லை.

அத்தோடு நீங்கள் என் பெயர் குறிப்பிட்டுநான் 2021ம் ஆண்டின் பாதீட்டினை தோற்கடிக்க முனைந்ததாகவும் உங்கள் உறுப்பினர்களது ஆதரவினையும் ஏனைய கட்சி தலைமைகளினது ஆதரவுகளினை கோரியதாகவும் குறிபிட்டுள்ளீர்கள். இது நீங்கள் நல்லூரில் வேறு தமிழ் விரோத சக்திகளோடு கூட்டுச் சேர்த்ததினை நியாயப்படுத்த மக்களினை திசைதிருப்ப இப்போது புதிய காரணமொன்றினை தேடி நீங்கள் கனவானாகவும் அரசியல் அறமுடையோனாகவும் நிறுவ முயற்சித்துள்ளீர்கள்.

மதிப்புக்கிரிய பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களே!
நல்லூர் பிரதேச சபையின் முதல் இரண்டான்டு கால தவிசாள‌ர் பதவி தமிழரசுக் கட்சிக்கும்,பின்னைய இருவருட தவிசாளர் பதவி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கும் என 2017 ஆம் ஆண்டே தலைவர்களுக்கிடையில் இணங்கி கையொப்பம் இட்ட விடயம்( ஆவனம் கீழே இணைக்கப்படுள்ளது) முதல் இரண்டு வருட கால தவிசாளருடைய‌ கெளரவ தியாகமூர்த்தி ஐயாவினுடைய பதவி காலம் ஏப்பிரல் 2020 உடன் முடிவடைந்த போதும் நாம் அவரை உடன‌டியாக பதவி விலகி என்னிடம் தரவோ கேட்கவுமில்லை, அவரினை கட்சியும் நிர்பந்திக்கவுமில்லை.
அப்போது எமது தலைவர்கள் எனக்கு கூறிய விடயம் “மதுசுதன் இது கொரோனா காலப்பகுதி இதில் பதவி கேட்பது அரசியல் நாகரீகமல்ல நீங்கள் இப்போதைய தவிசாளருடன் இணைந்து இடர்கால மக்கள் பணியாற்றுங்கள்” என்று பணித்தார்கள். இதுவே அரசியல் அறம்.
அதன் பின் பாராளுமன்ற தேர்தல் காலம் அதிலும் இவ் பதவி மாற்றங்கள் பற்றி பேசப்படவில்லை, அதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவுமில்லை.
பின்னர் நிலமை சுமூகமாக 2020 நவம்பர் மாதம் கட்சி தலைமைகள் தமிழரசு கட்சி காரியாலயத்தில் கூடி ஆட்சி மாற்றம் பற்றி கலந்தாராய்ந்த போது இப்போது இது பற்றி பேசாமல் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டை நிறைவேற்றும் வேலையினை பார்ப்போம் , தை மாதம் மாற்றி கொடுப்பொம் என்று முடிவு எட்டினார்கள்.இது அனைத்து கட்சி தலைவர்களும் அறிந்த ஒன்று.

ஆக தை மாதம் (இப்போது) கட்சி தாமாகவே எனக்கு மாற்றி தரும் சபையினை குழப்ப எந்த அரசியல் அறிவுள்ளவனும் முனைய மாட்டான் என்பது மக்கள் நன்கறிவர்.

அத்தோடு ஒரு மக்கள் சபையென்றால் பல கட்சி உறுப்பினர்கள் இருப்பார்கள் கலந்து பேசுவார்கள் , பாதீட்டை எதிர்பவர்கள் எதிர்க்கும் கருத்தினை தேநீர் அருந்தும் போதோ அல்லது வேறு கூட்டங்களின் போது நாசூக்க்காக பேசுவார்கள் அது அவர்களது தனிப்பட்ட விடயம்.
தாங்கள் கூறியது போல பாதீட்டினை தோற்கடிக்க கூட்டமைப்புக்குள் இருந்து யாரும் முயற்சிக்கவில்லை, ஆனால் தை மாத‌ம் சபை தவிசாளர் எனக்கு மாற்றி தரும் போது ஆதரவாக வாக்களிப்பீர்களா என உறுப்பினர்களிடையே நான் வினவியதுண்டு.அதை நீங்கள் மொட்டந்தலைக்கும் முழம்தாழுக்கும் முடிச்சு போடுவது போல திரித்து கூறுவது வேடிக்கையாகும்.

அடுத்த தவிசாளர் தெரிவில் எனது பெயர் இருப்பதால் பாதீட்டு தோல்விக்கு என்னை கைநீட்டுவது இலகுவானதும் அது அரசியல் அறத்தின் பால்பட்டு அநாகரிகமானது. இரண்டு பாதீடுகளுக்கும் நான் கூட்டமைபின் கொள்கை கோட்பாடு அரசியல் ஒழுக்கத்தின் பால் சார்பாகவே வெளிப்படையாக வாக்களித்திருந்தேன். இதை மக்கள் நன்கறிவர்.

அத்தோடு தாங்கள் கூறியது போல நான் கேட்டு மற்றய கட்சி உறுப்பினர்கள் கட்சி தலைமையினை மீறி என் சொல் கேட்டு வாக்களிப்பார்களானால் அவர்களுக்கு ஏன் கட்சி தலைமை? நானே அவர்கள் கட்சி தலைவர்களாக இருக்கலாமே! அத்தோடு நான் பாதீட்டுக்கு சார்பாக வாக்களித்துக்கொண்டு அவர்களினை எதிர்த்து வாக்களிக்க அவர்கள் என்ன அரசியலில் அங்கவீனர்களா? எனவும் யோசிக்க நீங்கள் மறந்தாலும் மக்கள் மறக்கமாட்டார்கள்.

பாதீட்டை என் சொல் கேட்டு எதிர்த்தவர்கள் ஏன் எனக்கு தவிசாள‌ர் தெரிவில் வாக்களித்திருக்கலாமே! இது பற்றி நீங்கள் சிந்திக்காது நீங்கள் தமிழ் தேசிய விரோத நிலைப்பாட்டுக்கு விலை போனதற்காக என்னை இதற்குள் இழுத்து விடுவது அரசியல் அறமா? ஆசானே!

அத்தோடு

2021 க்கான பாதீடு முதல் முறையும் தோற்றபோது இதற்கு மதுசுதன் காரணம் என்று கூறாத தாங்கள், இரண்டாம் தட‌வையும் தோற்கடிக்கப்பட்டு தவிசாளர் பதவியிழந்த போது மதுசுதன் காரணம் என்று அரசியல் அற‌த்தின் பால் மக்களுக்கு எடுத்துக் கூறாத தாங்கள் என் பெயர் கூட்டமைப்பு சார்பான தவிசாளர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் திடுக்கிட்டெழுந்து இதை ஆயுதமாக எடுத்து கொண்டது அரசியல் அறமா? என மக்கள் நன்கறிவர்.
என்மீது குற்றம் இருந்தால் கட்சியும் கூட்டமைப்பும் ஒழுகாற்று நடவடிக்கை எடுத்திருக்கும், தமிழரசும் பங்காளி கட்சிகளினது கூட்டாக கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கப்படது எப்படி? தமிழரசு உறுப்பினர்கள் எனக்காக வாக்களித்திருந்தார்கள். கூட்டமைப்பு நல்லூரில் தொற்கடிப்பட்டது உமது தமிழ் தேசிய விரோத நிலைப்பாடினாலேயே ஆகும் என மக்கள் நன்கறிவர்.

“நல்லூரில் ஒரு உண்மையான மக்கள் சேவகன் வளர்ந்து வந்துவிடக்கூடாது என்பதிலும் உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தாக அமைந்துவிடும் ,இவனை இப்படியே வளர விடக்கூடாது இப்போதே கிள்ளி எறிய வேண்டும் , நல்லூர் சபையை ரெலோ கைபற்றுவதா? எமது அரசியல் எதிர்காலம் நல்லூரில் என்ன ஆவது” என நீங்கள் உங்களில் நம்பிக்கையானவர் என கருதப்படும் ஒருவருக்கு கூறியுள்ளீர்கள் அவரது பெயரினை அரசியல் அறத்தின் பால் நின்று நான் வெளிபடுத்த மாட்டேன்.

இதெல்லாம் தெரிந்தும் ஒரு தவிசாளர் தெரிவில் ஜனநாயக வெளியில் ஒருவரை ஆதரிப்பது எதிர்ப்பது என்பது அவரவர் ஜனநாயக உரித்து என்ற அரசியல் புரிவோடு உங்களை நான் அரசியல் அறத்தின் பால் பொதுவெளியில் எந்த விமர்சனங்களுக்கோ, வசைபாடலுக்கோ உட்படுத்தவில்லை .இதனை உலகம் நன்கரியும். ஆனால் நீங்கள் தமிழ் விரோத சக்திகளுக்கு சோரம் போனதாலும் உங்கள் போலி முலாம் கழுவப்பட ஆரம்பமானதாலும் என் தனிப்பட்ட பெயரினை இழுத்து உங்கள் அரசியல் ஆயதம் தேட முற்பட்டதும் அரசியல் அறமா ஆசானே!
உங்களினை நியாயப்படுத்த ஏதோவொரு பதட்டத்தில் ஒரு சிறியோனை இழுத்து அரசியல் பரப்பில் பேசுபொருளாக்க நீங்களாகவே சுயமிழந்து பரபரப்பாகியுள்ளீர்கள்.

அத்தோடு மதிப்புக்குரிய ஆசானே!

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் உங்கள் சுயேட்சை குழுவில் களமிறங்க எனக்கு நீங்கள் தினம்தோறும் தொலைபேசியிலும், நேரடியாகவும் அழுத்தம் கொடுத்ததை நானும் நீங்களும் மறக்க மாட்டோம். அக்காலத்தில் என்னை திருநெல்வேலி வை.எம்.சி.ஏ கட்டடத்தில் வரச்சொல்லி சந்தித்த நீங்கள் உங்கள் மாம்பழ சின்னத்தில் சுயேட்சையாக கள‌மிறங்க மீண்டும் நீங்கள் அழுத்திய‌ போது நான் கூட்டமைப்பில் வேட்பாள‌ராக போகிறேன், கூட்டமைப்பை அன்று தொட்டு இன்றுவரை ஆதரிப்பதால் அதுவே என் முடிவு அவர்களுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டேன் என்று உங்களுக்கு எடுத்து கூற
“அது பறவாயில்லையடாப்பா நீ இந்த வேட்பு மனுவில கையெழுத்து போடு நாங்கள் வேளைக்கே வேட்பு மனு கையளிச்சுடுவம், எங்கடையில வேட்பாளர் எண்டா பிறகு கூட்டமைப்பில உன்ர பெயர அக்சப்ற் பண்ண‌ மான்டினம் குஞ்சு” என்றீர்கள். ஒரு தமிழ் தேசிய கட்சிக்கு வாக்கு கொடுத்து என்னில் நம்பி என்னை வேட்பாளராக களமிற‌க்க நினைக்கையில் உமக்கு சிற‌ந்த வேட்பாளர் கிடைக்க வேண்டுமென்பதற்காக எனக்கு ஆசனம் தந்த கட்சிக்கு துரோகம் பண்ணி உங்கள் வேட்பு மனுவில் கையொப்பம் வாங்கக் கேட்டது அரசியல் அறமா ஆசானே? அல்லது எனக்கு ஆசனம் தந்த கட்சிக்கே நான் விசுவாசமாக இருந்தது அரசியல் அறமா? மதிபார்ந்த ஐங்கரநேசன் அவர்களே!

நீங்கள் எந்த கட்சிக்கூடாக அரசியல் பரப்பில் காலடி எடுத்து வைத்தீர்கள், பின் அக்கட்சிக்கு விசுவாசமற்று இன்னொரு கட்சி தாவி வடக்கு மாகாண சபை தேர்தல் கேட்டு அதில் விவசாய அமைசர் ஆகினீர்கள். அப்போது நான் விவசாய பீட பல்கலைகழக மாண‌வனாக இருந்த போது “பசும் தோகை” எனும் நூல் வெளியீடு 2014 ம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற போது நீங்கள் தான் பிரதம விருந்தினர். தமிழ் ஈழத்தின் தேசிய பறவை செண்பகம் என்றும் அது அழிவடைவதாகவும், வேலிகள் இல்லாததனால் மயிர்கொட்டிகள் உண‌வாக இல்லாததனால் அவை இற‌ப்பது வேதனை அது எமது தேசிய பறவை” என்று எம் தேசத்தினையும் தேச வளங்களினையும் நேசிப்பவராக பேசினீர்கள் அப்போதே உங்களில் இன்னும் எனக்கு அதிக மரியாதையும் அன்பும் மேலோங்கியது.

ஆனால் வடக்கு மாகாண சபையில் உங்கள் அமைச்சு பதவி ஏன் பறிக்கப்பட்டது என்பதனை நான் அறிந்ததும் நான் திடுக்கிட்டே போனேன். வடக்கு மாகாண‌ சபையின் அமைச்சுக்களில் என்ன என்ன நடந்தது யார் யார் …….வாதிகள் என முன்னாள் முதலமைச்ச‌ர் நியமித்த விசாரணைக்குழு தெளிவாக வெளிப்படுத்தியதும் அதன் மூலம் எப்படி உங்கள் பதவி பறிபோனது என சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயமாக மக்களுக்கு தெரியும். எது அறத்தின் பாற்பட்டது என மக்கள் நன்கறிவர்.

நீதியரசர் விக்னேஸ்வரன் நீதியின் பால் நின்று தங்களை தம் அரசியலுக்குள் மீண்டும் சேர்த்து கொள்ளாததால் புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்தீர்கள், அதனூடாக நீங்கள் வளர சிறியோனது பெரிய வாழ்த்துக்கள்.

ஆனால் ஐயா கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற‌ தேர்தலிலே புளொட் இயக்கத்திற்கு இரு வேட்பாளர்கள் ஆசன‌ங்கள் கிடைத்த போது அதிலுள்ள இளம் வேட்பாள‌ருக்குரிய ஆசனத்தினை நீங்கள் பெற எத்தனை முயற்சி செய்தீர்கள் என்பதும் எமக்கு மட்டுமல்ல அரசியல் பரப்பில் உள்ளோருக்கும் மக்களுக்கும் நன்கு தெரியும்.

ஆக கடந்த 6 வருட தங்கள் அரசியல் பயணத்திலேயே நீங்கள் எந்தவொரு கட்சிக்கும் விசுவாசமாகவோ கட்சி கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ மக்களின் ஆணையினையோ அற‌த்தின் பால் நின்று மதிக்கவில்லை என்பது கண்கூடு. இது அரசியல் அறமா என மக்களே தீர்மானிக்கட்டும்.

நான் பயணிக்க வேண்டிய பாதை அரசியல் அல்ல ஆனாலும் இளைஞர்கள் செயற்பாட்டு அரசியல் பர்ப்புக்குள் ஊடுறுவ வேண்டும், மக்கள் நலன் சார் நடவடிக்கைகளினை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசியல் பரப்புக்குள் விரும்பி வந்தவன்.காசு பணம் பார்க்கவோ, புகழடையவோ,அரசியல் அறம் என கூறி தமிழ் தேசிய முலாம் பூசி கட்சி கொள்கைகளினையும் தமிழ் தேசியத்தினையும் விற்று பிழைக்கும் எண்ணமோ நமக்கு இருந்ததில்லை. இனி இருக்க போவதுமில்லை.

அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானே!

என் தவிசாளர் தோல்வியில் நீங்கள் தமிழ் தேசிய விரோத சக்திகளுக்கு விலை போனது காரணமென்று தெரிந்தும் உங்களில் நான் இன்னும் மதிப்பிழக்கவில்லை. அத்தோடு உங்க‌ளினை காழ்புணர்வு கொண்டு பொது வெளியில் விமர்சிக்கவும் இல்லை. ஏனெனில் எனக்கு உங்களளவுக்கு அரசியல் அறமும் நாகரீகமும் இல்லையென்றாலும் ஓரளவேனும் உள்ளது. நீங்கள் விடுத்த ஊடக அறிக்கைக்கு பதிலுரைக்காது போனால் நீங்கள் கூறியது எல்லாம் உண்மையென்றாகிவிடும். அதனால் அதற்கான பதிலை பொது வெளியில் பதிவிடுகிறேன். இதில் ஏதாவது தங்களினை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்குமாறு பேரன்போடு வேண்டி நிற்கிறேன்.

இறுதியில் ஐயா ஒன்று

நல்லூரில் நான் வந்தால் என் கட்சி வென்றால் உங்கள் அரசியல் இருப்புக்கு கேள்விக்குறியாகிவிடும் என நீங்கள் நினைதிருந்தால் அதை என்னோடு நாடி தவிசாளராகும் முயற்சியினை கைவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தால் அதை நான் என் கட்சியோடு கூடி பேசி ஆராய்ந்திருக்கலாம். அப்படி நீங்கள் கேட்டிருந்தாலும் கூட அரசியல் அறமின்றி பொதுவெளியில் பகிர்ந்திருக்க மாட்டேன் ஐயா! ஏனெனில் அரசியல் நாகரிகத்தோடு அரசியல் செய்யவே இந்த தலைமுறையினர் எண்ணுகிறோம்.

இனியும் அரசியல் அற‌த்தோடு தமிழ் தேசிய முலாம் இல்லாமல் மக்களுக்கு மக்களுக்காகவே அரசியல் செய்யுங்கள் ஐயா! நீங்கள் அரசியல் அறம் தவறி என் பெயரினை மாசுபடுத்த விளைந்தாலும் இப்போதும் நான் உங்களில் மதிப்புற்றிருகிறேன் ஐயா!

நன்றி
கு.மதுசுதன்
உறுப்பினர் நல்லூர் பிரதேச சபை,
நல்லூர் தொகுதி அமைப்பாளர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
05.01.2021

TELO Admin