Hot News
Home » செய்திகள் » ஒற்றுமை அவசியம்; தமிழர்களை இந்தியா கைவிடாது: கூட்டமைப்பிடம் தெரிவித்தார் ஜெய்சங்கர்!

ஒற்றுமை அவசியம்; தமிழர்களை இந்தியா கைவிடாது: கூட்டமைப்பிடம் தெரிவித்தார் ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று (7) நடைபெற்றது.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பிளட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இனப்பிரச்சனை தீர்வில் இந்தியாவின் தலையீட்டின் அவசியம், மாகாணசபைகள் முறைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்தனர்.

பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டது. அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ்பக்கம் தகவல்களை பெற்றது.

இதன்போது, புதிய அரசியலமைப்பு உருவாகும் போது இருக்கும் விடயங்களை பேணும் விதமாக (13வது திருத்தம்) நடந்து கொள்வது புத்திசாலித்தனம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கூட்டமைப்பு தரப்பினரும் அதை ஏற்றுக்கொண்டனர். நேற்று வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஜெய்சங்கர் விடுத்த அறிவிப்பை சுட்டிக்காட்டி- 13வது திருத்தம் தொடர்பில் அவர் குறிப்பிட்டதை- அந்த நிலைப்பாட்டை வரவேற்பதாகவும், தமது நிலைப்பாடும் அதுதான் என்றும் குறிப்பிட்டனர்.

அத்துடன், இருக்கும் நிலைமையை தக்க வைக்கும் அதேநேரத்தில், 13பிளஸ் முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த சந்திப்பில் முக்கியமாக, அனைத்து தமிழ் தரப்பும் ஓரணியில் நிற்க வேண்டுமென்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

அரச தரப்பில் அதிகமான தமிழ் பிரதிநிதித்துவம் ஏற்படுவது, தமிழ் தரப்பை பலவீனப்படுத்தும் என்பதுடன், இந்தியாவினாலும் தமிழ் மக்களிற்காக தலையிட முடியாத நிலைமையை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதற்கு உதாரணமாக, நேற்று பல தமிழ் தரப்புக்கள் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போதும், அதில் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே 13வது திருத்தம் குறித்து வலியுறுத்தியிருந்தார். ஏனைய யாரும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் மூச்சும் விடவில்லையென்பதை உத்தியோகபற்றற்ற விதமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு உருவாகும் நேரத்தில், அனைத்து தமிழ் தரப்புக்களும் ஓரே குரலில் தமது தேவையென்ன என்பதை வலிறுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். அப்படியொரு நிலைமை இருக்கும் பட்சத்தில், இந்தியா தமிழ் மக்களை கைவிடாது என உத்தரவாதமளித்தார்.

அத்துடன், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாட்டை நிறுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியையும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

இது குறித்து அரசுடன் ஏற்கனவே பேச்சை ஆரம்பித்துள்ளதாகவும், அவற்றின் இயக்கம் தொடர முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்பு, தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பது பற்றியும் கூட்டமைப்பு வலியுறுத்தியது. அது குறித்து கவனம் செலுத்துவதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

TELO Admin