யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க, நல்லூார் பிரதேச சபை இன்று(11) அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்று காலை வரை உணவு தவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல்லையும் மாணவர்களுடன் இணைந்து யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நாட்டினார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு விஜயம் சென்று பார்வையிட்ட யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், அங்கு வந்திருந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பது தொடர்பில் நல்லூார் பிரதேச சபையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தூபியினை நிர்மாணிப்பதற்கான முழுமையான நிதியையும் திருகோணமலையை சேர்ந்த ஒருவர் வழங்குவதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார்” எனவும் அவர் மாணவர்களிடம் தெரிவித்தார்.