Hot News
Home » செய்திகள் » வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி திட்டமிட்டே தேடுதல் செய்தனர்: – சபையில் ஜனா தெரிவிப்பு

வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி திட்டமிட்டே தேடுதல் செய்தனர்: – சபையில் ஜனா தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் கிராமத்திலுள்ள தனது வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி நேற்று திங்கட்கிழமை அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் திட்டமிட்ட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு மாவட்ட ரெலோ அமைப்பின் உறுப்பினரான கே.கருணாகரன் (ஜனா) தெரிவித்தார்.தன்னையும் தனது குடும்பத்தவரையும் அச்சுறுத்துவதற்காகவே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

என்னுடைய வீட்டில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால்; தேடுதல் நடத்தவேண்டுமெனக் கூறி இன்றையதினம் அதிகாலை 1.00 மணியளவில் (01.10.2012) என்னுடைய வளவினுள் களுவாஞ்சிக்குடி பொலிஸார் நுழைந்தனர். அப்போது நான் அங்கிருக்கவில்லை. இச்சபை அமர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு வீட்டிலிருந்து பயணமாகியிருந்தேன்.பொலிஸார் வளவினுள் நுழைந்தது மட்டுமன்றி, வீட்டினுள் சோதனை செய்ய வேண்டுமெனக் கூறி கதவைத் திறக்குமாறு கேட்டிருக்கின்றனர். ஆனால், அச்சத்தினால் வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறக்கவில்லை. இவ்வேளை, எனது வீட்டில் 80 வயதான எனது தாயார் உள்ளிட்டோர் இருந்தனர். ஆனாலும், பொலிஸார் அதிகாலை முதல் பகல் வரை தேடுதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு அங்கிருந்துள்ளனர். இதையொரு சிறப்புரிமை மீறலாக நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இது என்னை அச்சம் மூட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு நடவடிக்கையாகும். எதிர்காலத்தில் இச்சபையின் உறுப்பினர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம்பெறாதிருக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்.இன்று எனது பிறந்தநாளாகும். இச்சபை அமர்வில் கலந்துகொள்ள வேண்டுமென்ற விருப்புடன் நான் இங்கு வந்தேன். இவ்வாறானதொரு நிலையில்தான் என்னுடைய வீட்டில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது’ என்றார்.

TELO Admin