Hot News
Home » செய்திகள் » தேசிய ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும், அரசும் அரசுசார்ந்த தமிழ் அடிவருடிகளும்! ஜனா

தேசிய ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும், அரசும் அரசுசார்ந்த தமிழ் அடிவருடிகளும்! ஜனா

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய ஐக்கியத்துக்கும் இன நல்லிணக்கத்துக்கும் சவாலாக இருப்பதாக அரசும் அரசுசார்ந்த தமிழ் அடிவருடிகளும் ஒப்பாரி வைத்துக்கொண்டு தேசிய ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். வடகிழக்கில் 64 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உதவிப் பிரதேச செயலாளர்களாக பெரும்பான்மையினத்தவர்களை இணைப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதை நிறுத்துமாறு கோரி மாகாணசபை உறுப்பினர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன நல்லிணக்கம் தேசிய ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதை அல்ல. அது இரு வழிப்பாதை. அதனை எவ்வாறு எடுத்துக் கூறினாலும் இந்த அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை. இதுவே நடைமுறை யதார்த்தமாக இருந்து வருகின்றது.இந்த இலட்சணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய ஐக்கியத்துக்கும் இன நல்லிணக்கத்துக்கும் சவாலாக இருப்பதாக அரசும் அரசு சார்ந்த தமிழ் அடிவருடிகளும் ஒப்பாரிவைத்து உரக்க ஓலமிடுகின்றன.அன்றும் இன்றும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன ஐக்கியத்துக்கும் இன நல்லிணக்கத்துக்கும் ஏன் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் கூட சவாலாக இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. நாம் எமது கொள்கையில் தொடர்ந்தும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.வடகிழக்கில் எமது மக்கள் சுதந்திரமாகவும் சமவுரிமையுடனும் வாழக்கூடிய நிலைமையே எமது தேவை. இதனை புரிந்துகொள்ள விரும்பாது அரசு தேசிய ஐக்கியத்துக்கு நாம் சவால் என கூறிக்கொண்டு தானே தேசிய ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.அண்மையில் பொது நிர்வாக அமைச்சின் மூலம் வடகிழக்கில் உள்ள 64 பிரதேச செயலகங்களுக்கு பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் உதவிப்பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்படவுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது.வடகிழக்கு மாகாணங்களில் இரு மொழிச்சேவைகளை உறுதிப்படுத்தும் திட்டம் என்ற அடிப்படையிலேயே இந்த நியமனங்கள் இடம்பெறவுள்ளன.இருமொழிச் செயற்திட்டம் இந் நாட்டிற்கு தேவையானது. அவசியமானது. இன ஒற்றுமைக்கும் இன நல்லிணக்கத்திற்கும் தேவையானது. இதில் இரு கருத்திற்கு இடமில்லை.ஆனால் இந்த இருமொழி அமுலாக்கல் செயற்திட்டம் வடகிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது வடகிழக்கு மாகாணத்திற்கு வெளியிலுள்ள பிரதேச செயலகங்களுக்கும் அமுல்படுத்தப்படுமானால் அது வரவேற்கத்தக்கதாகும்.மாறாக இச் செயற்பாடு வடகிழக்கு மாகாணத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுவது தான் அரசின் நல்லிணக்கச் செயற்பாடு குறித்து சந்தேகம் கொள்ள வைக்கின்றது.அரசியலமைப்பு கூட பிரஜைகள் சொந்த மொழியில் நிர்வாகம் செயற்படுவதனை உறுதிப்படுத்துகின்றது. ஆனால் வடகிழக்குக்கு மட்டும் அரைகுறையில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் மறைமுகமான முயற்சியே இதுவாகும்.இன நல்லிணக்கம் தொடர்பாக எமது தேசியக் கூட்டமைப்பு சார்பில் அன்று தொடக்கம் எடுத்துரைக்கப்பட்டது. இடித்துரைக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை சிங்கள அரசுகள் செவிமடுக்கவில்லை.மாறாக இன்று இருமொழிக் கொள்கை அமுலாக்கம் என்ற வடிவத்தில் சிங்கள மேலாதிக்கம் புதிய எழுச்சி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நிலப்பறிப்பு, பௌத்த மேலாதிக்கம், சிங்கள திணிப்பு என்பவற்றிற்கான மறைமுக முயற்சியே இதுவாகும்.இதனை முளையிலேயே கிள்ளியெறிய மாகாண சபை மூலமும் நீதி மன்றம் மூலமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக தனது வன்மையான கண்டனத்தை ஜனாதிபதி அவர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சிற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

TELO Admin