Hot News
Home » செய்திகள் » சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யமாகும் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் – விக்கிலீக்ஸ்

சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யமாகும் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் – விக்கிலீக்ஸ்

சர்வதேச விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவு சூன்யத்தை அண்மித்த நிலையில் காணப்பட்டது என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரம் பற்றிய புரிதல் பூஜ்ஜியத்தை அண்மித்ததாகும் என சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார். நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன், எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான சந்திப்பின் போது, சொல்ஹெய்ம் இதனைக் குறிப்பிட்டிருந்தார். யுத்தம் நிறைவடையும் வரையில் நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகத் தெரிவித்திருந்தார்.எனினும், 2006ம் ஆண்டின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுடன் தொலைபேசி மூலமே தொடர்புகளைப் பேணியதாகக் குறிப்பிட்டிருந்தார். சர்வதேச சமூகம் அல்லது புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் திடமாக நம்பியிருந்தனர் என குறிப்பிட்டிருந்தார்.2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதுவர் க்ளைன்ட் வில்லியம்ஸ்சனும், எரிக் சொல்ஹெய்மும் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். மே மாதம் 17, 18ம் திகதிகளில் நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகக் குறிப்பிட்டிருந்தார்.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைவது தொடர்பில் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்திருந்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக சரணடைய புலிகள் விரும்பியதாகக் குறிப்பிட்டிருந்தார்.எனினும், இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த வலயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்போ பிரசன்னமாகியிருக்கவில்லை எனவும், வெள்ளைக் கொடியொன்றை அசைத்து சரணடையமாறும் நோர்வே அரசாங்கம், புலிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்திருந்தார்.இந்தத் தகவல் வழங்கப்பட்ட மறுநாள் சகலரும் உயிரிழந்திருந்தாகவும், எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தெரியாது எனவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருந்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டதாக, அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

TELO Admin