Hot News
Home » செய்திகள் » இந்தியாவுக்கு கடுப்பேற்ற, இராணுவ ஜெனரலை கொழும்புக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்

இந்தியாவுக்கு கடுப்பேற்ற, இராணுவ ஜெனரலை கொழும்புக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்

சிறிலங்காவுக்கான தூதுவராக ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ஒருவரை நியமிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான தூதுவர்களை பாகிஸ்தான் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. சிறிலங்காவுக்கான தூதுவராக உள்ள சீமா இலாகி பலுச் அடுத்த மாதம் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தூதுவராக ஓய்வுபெற்ற பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கான தூதுவராக நியமிப்பதற்குத் தகுதியான ஓய்வுபெற்ற ஜெனரல்களின் பட்டியல் ஒன்று பாகிஸ்தான் அரசின் பரிசீலனையில் உள்ளது. பெரும்பாலும், பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய ஒரு அதிகாரியே சிறிலங்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை வளர்த்துக் கொள்ளும் வகையிலேயே ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியைத் தூதுவராக நியமிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் உளவுப்பிரிவு இந்தியாவை உளவு பார்ப்பதற்கான தளமாக சிறிலங்காவைப் பயன்படுத்தி வருகிறது என்று அண்மையில் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இந்தநிலையிலேயே ஒய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ஒருவரை சிறிலங்காவுக்கான தூதுவராக பாகிஸ்தான் அனுப்பவுள்ளது.

TELO Admin