திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜனாப் ஃபயாஸ் ரசாக்கும் பிரதம நீதிவான் நீதிமன்ற நீதவானாக ஜீவராணி கருப்பையாவும் நேற்று சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
குறித்த சத்தியபிரமாணங்கள், நேற்று (13.09.2024) மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா 12.09.2024 அன்று நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது.
பணியிடை நிறுத்தத்தின் பின்னணி
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புல்மோட்டை 3ம் வட்டாரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நடமாடியதால் 119 எனும் அவசர இலக்கத்திற்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். குறித்த சம்பவம் 04.09.2024 அன்று இரவு இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து புல்மோட்டை பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்ற வேளையில் அங்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றதில் வழக்குகள் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இருந்ததாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
பதற்றமடைந்த நிலையில் மக்கள் அங்கு ஒன்று கூடியதால் பொலிஸார் பாதுகாப்புடன் குறித்த நீதிபதியை பின் பக்கத்தினால் வெளியேற்றி அனுப்பியதாக புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .
குறித்த சிவில் சமூகத்தை சேர்ந்த வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட பெண் ஒருவரின் வீட்டுக்கு நீதிபதி இரவு நேரத்தில் செல்ல முடியுமா என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும் குறித்த நீதிபதியின் அரச வாகனமும், குறித்த பெண்ணின் வேலையாள் ஒருவரினால் செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த வாகனத்தை பொலிஸார் மீட்டு குறித்த நீதிபதியிடம் பொலிஸார் ஒப்படைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.