எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

2025 இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடைய சிம்மாசன உரை சம்பந்தமாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் பலவாறு விமர்சித்திருந்தார்கள். இதை நாங்கள் எத்தனை நாளைக்கு கூறிக் கொண்டிருக்க போகின்றோம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

அதிலே சில விடயங்களை பொதுவாக நாட்டுக்கு சொல்லியிருக்கின்றார். நாடு பூராகவும் எழும்பிய கொந்தளிப்பு காரணமாக முதல் தடவையாக தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்றே நாங்கள் கூற வேண்டும்.

இதை விட தொழில்நுட்பம், நீர்ப்பாசனம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கூறியிருந்தார். காணாமல் போனோர் விவகாரம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூற விழைகின்றார்.

படையினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். ஆனால் அவற்றுக்கான நீதியை இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியாது. ஆகவே இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டு சர்வதேச நீதி விசாரணையை நடாத்த வேண்டும். அதை விடுத்து திருப்பித் திருப்பி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

பொருளாதார ரீதியாக சில விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார். எத்தனை பேர் ஒத்துழைத்தாலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகின்றது. இதுவரை ஒத்துழைத்தவர்களால் எதை சாதிக்க முடிந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மூச்சும் விட்டு இருக்கவில்லை. மூச்சு விட்டிருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச ஆயத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய அரசியலமைப்புக்கான குழுவை ஜனாதிபதி நியமித்து இருந்தார். அந்த குழுவுக்கு அரசியல் கட்சிகள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்திருந்தார். ஏறக்குறைய அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சென்று வருமா வராதா என்ற நிலையில் காணப்படுகின்றது. இதுவே நல்லாட்சியிலும் நடந்தது. இதற்கு முதலில் அல்லவா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். இனிமேல் அழைத்து என்ன பேசப் போகிறீர்கள்.

பிரதான தமிழ் தேசிய மூன்று அணிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கூட்டணி கூட்டு இணைப்பாட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஸ்டியையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமஸ்டியையும் கோருகின்றது.

ஆளால் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை அறவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் இனப்படுகொலை உட்பட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும்.

இதற்கு மூலவேரான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகளில் நடைபெற்றது போல பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயம்.

இதை விடுத்து 2025இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என்றார்.

ஒரு வளத்தினைக் கொண்டுவந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம் -ரெலோ செயலாளர் ஜனா

‘தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். ஆனால் ஒரு வளத்தினைக் கொண்டு வந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்’ என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு –ஏறாவூர் புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிக் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் சென்றிருந்தார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்தான தகவல்கள் அங்கு கிடைத்ததுடன் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

குறித்த இடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலையின் கழிவினை சுத்திகரித்து கடலினுள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டாலும் கடலுடன் கலக்குமானால் கடல்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலையேற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், “மட்டக்களப்பு புன்னக்குடா கடற்பகுதியில் மர்ம குழாய்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மர்மம் விளங்கவில்லையென ஓரிரு நாட்களில் செய்திகளில் பார்த்தோம்.அதனை நேரடியாக கண்காணிப்பதற்காக இந்த பகுதிக்கு விஜயம்செய்தேன்.நாங்கள் இதற்குள் நுழையும் நுழைவாயிலில் இராணுவமுகாம் ஒன்று அமைக்கப்படுகின்றது.

குழாய்கள் கடலுக்குள் சுமார் 200மீற்றர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசினேன். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது.சுமார் 13கோடிரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புன்னக்குடா பகுதியில் சுமார் 200ஏக்கருக்கு அதிகமான பகுதி முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆடைத்தொழிற்சாலைக்கு மேலாக நூல்களுக்கு வர்ணம் சேர்க்கும் தொழிற்சாலையொன்றும் நிர்மாணிக்கப்பட வுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது அவரும் இதனை உறுதிப்படுத்தினார். தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த தொழிற்சாலைகள் இன்னொரு வளத்தினை கொடுத்து ஒரு வளத்தினை அழிப்பதாகயிருக்ககூடாது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்திசபை மற்றும் பனை உற்பத்தியாளர்களுக்கான பனை மூலப்பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியா இதுவுள்ளது.அதிகளவான பனைமரங்களைக்கொண்ட பகுதி.அந்த பனை மரங்கள் அழிக்கப்படக்கூடாது” என்றார்.

போர் முடிந்துவிட்டது உண்மைதான் ஆனால் சமாதானம் பிறக்கவில்லை! சித்தார்த்தன்

” 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் – சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. இந்நாட்டில் நிலையான சமாதானமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமெனில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பான சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. கொள்கைகளை ஓரமாக வைத்துவிட்டு தமது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். எமது கொள்கையென்பது எங்கள் மக்களின் அபிலாஷைகளையே பிரதிபலிக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வேண்டும், அந்த தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என எமது மக்கள் தெளிவாக எடுத்துரைத்துவருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஆணை வழங்கிவருகின்றனர். எனவே, இது ஓரங்கட்டக்கூடிய விடயம் அல்ல.

எமது பகுதிகளுக்கு அபிவிருத்தி என்பதும் அவசியம். அந்த விடயத்தை நாம் மறுக்கவில்லை. அதைவிடவும் அரசியல் தீர்வே அடிப்படையாக உள்ளது.

கொரோனாவால் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு கொரோனாவும் ஓர் காரணம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையும், அதனால் ஏற்பட்ட யுத்தம் உள்ளிட்ட காரணங்களால்தான் இந்நாட்டில் பொருளாதாரம் மேம்படவில்லை. பொருளாதார பின்னடைவுக்கு மூலக்காரணியே இந்த இனப்பிரச்சினைதான். பண்டா – செல்வா காலம் தொட்டு பல பேச்சுகள், போராட்டங்கள் என பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தும் நியாயமான தீர்வு இல்லை. அந்த தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

போர் முடிவடைந்திருந்தாலும் சமாதானம் வந்துவிட்டதாக கூறமுடியாது. போர் ஏற்படுவதற்கு வழிசமைத்த காரணிகள் இன்னும் அவ்வாறே உள்ளன. இதற்கு சரியான பரிகாரம் தேட வேண்டும். புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஜனாதிபதி சொல்கின்றார். அதன் ஊடாகவேனும் நிலையான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.” – என்றார்.

சுற்றுலாப் பயணிகளிடம் டொலர்களை அறவிடுமாறு உத்தரவு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் தொகையை டொலர்களில் அறவிடுமாறு பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு விசேட உத்தரவை இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது.

இதன் ஊடாக நாட்டுக்குள் வரும் டொலர்களை அதிகரிப்பது மத்திய வங்கியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வணிக வங்கிகள் இறக்குமதி பத்திரங்களை வழங்கும் போது, வங்கிக்கு கிடைக்கும் அந்நிய செலாவணிகளின் விகிதங்களுக்கு நிகராக பணத்தை வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையானது நிரந்தர வைப்பு வசதிகளின் வீதத்தையும் நிரந்தர கடன் வசதி வீதத்தையும் தலா இலக்கம் 50 என்ற வகையில் 5.50 வீதமாகவும் 6.50 வீதமாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சியுடன் இணைந்து மைத்திரி கட்சியை அழித்து விட்டார்! சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க நினைவு மண்டப சூழலில் அவர், நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டாம் என நான் கூறினேன். அதனை கவனத்தில் கொள்ளாது அந்த கட்சியுடன் இணைந்தனர். எனது ஆட்சிக்காலத்தில் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றினேன்.

தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமையை அழித்து விட்டது. மிகவும் கவலைக்குரியது. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. யுத்தம் பயங்கரமாக நடைபெற்ற காலத்தில் நான் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினேன்.

ஒருவர் கூறுவது மற்றுமொருவருக்கு தெரியவில்லை. காலையில் கூறுவதை மாலையில் மாற்றி விடுகின்றனர். பெரிய சிக்கல். மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து விட்டனர்.

மொட்டு கட்சியுடன் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக கூறி வந்தேன். நாம் அழிந்து விடுவோம் என்று சுட்டிக்காட்டினேன். இதனை கூறியமைக்காக என்னை கட்சியின் அரசியல் சபையில் இருந்து விலக்கினர்.

என்னை அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கினர். நாங்கள் பல வருடங்களாக கூறியமை மைத்திரிபால சிறிசேன தற்போது கூறுகிறார். இந்த மனுஷனை விரட்ட வேண்டாமா? என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமரின் அலுவலகத்தில் இயங்கிய ஊழல் எதிர்ப்பு குழு மேற்கொண்ட விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சந்திரிக்கா நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் ஆணைக்குழுவிற்கு செல்லவில்லை. விசாரணை அதிகாரிகள் பண்டாரநாயக்க நினைவு மண்டப சூழலில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்கவில்லை – வினோ எம்பி!

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் அவருக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்காமை தொடர்பில் கவலையும் வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம் பெற்ற சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கணேஷ் இந்துகாதேவி மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்.அரசு அவருக்கு பயண அனுமதியை வழங்கியதே தவிர வேறு எந்த உதவிகளையும் வழங்கவில்லை .அவரின் பாகிஸ்தான் பயணத்துக்கு எமது பொது அமைப்புக்களே நிதி உதவி செய்தன.இவ்வாறான நிலையில் தான் அவர் தங்கம் வென்று நாட்டுக்கும் வன்னி மண்ணுக்கும் தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரைப்போன்ற எத்தனையோ திறமையான, நாட்டுக்கு பெருமை தேடித்தரக்கூடிய வீர,வீராங்கனைகள் வடக்கு,கிழக்கில் உள்ளனர். அவர்களுக்கு அரசு வாய்ப்புக்களையும் வசதிகளையும் வழங்க வேண்டும் என்றார்.

இலங்கையில் 11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு ஐந்து நட்சத்திரங்கள்!

இலங்கையில் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக நாட்டின் இளைஞர் யுவதிகள் உட்பட்ட பொதுமக்கள், எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படவேண்டும் என்றும் அவர் இன்று தமது நாடாளுமன்ற உரையின்போது கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் அரசியல்வாதிகள் மாறப்போவதில்லை என்பதன் காரணமாகவே இளைஞர் மற்றும் யுவதிகள், அரசியல் கலாசாரத்தை மாற்றவேண்டும் என்று தாம் கோருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இளைஞர் யுவதிகள் இந்த மாற்றத்தை எதிர்பார்த்தபோதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர். எனவே எதிர்காலத்தில் பொதுமக்கள் தூரநோக்கத்துடன் செயற்படுமாறு சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பு இல்லாத நாடாக இங்கிலாந்து இருக்கின்றபோதும் இங்கிலாந்தில் ஜனநாயகம் சிறப்பாக பேணப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தபோது ஆதரவாளர் ஒருவரையும் அழைத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் தமது பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.

எனினும் இலங்கையின் அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கு செல்லும்போது தமது வளர்ப்புப்பிராணிகளையும் கொண்டு செல்கின்றனர் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் இளவரசர் அன்றூ மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே, அவர் வகித்து வந்த அட்மிரல் பதவியை மஹாராணி ரத்துச்செய்தார்.

பிரிட்டனில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரியுள்ள ஜனாதிபதி

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின்​ புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் , இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, ஒரே சமூகமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே அரசின் இலக்கென இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்களின் அடைவு மட்டம், மிகுந்த முன்னேற்றத்தைக் காட்டுவதாக தாரிக் அஹமட் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதனை மேலும் பலப்படுத்துவதற்தான திட்டத்தை வகுத்து முன்னோக்கி செல்வதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடிவும் என அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் இன்று (20) மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

மார்ச் மாத ஜெனிவா அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளுக்கு பிரித்தானியா தலைமை தாங்குவதனால், அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

முகமாலையில் மனித எச்சங்களும், சான்று பொருட்களும் மீட்பு!

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டமையை தொடர்ந்து குறித்த பகுதிக்கு இன்று (புதன்கிழமை) சென்ற  கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த பகுதியை பார்வையிட்டிருந்தார்.

இதனையடுத்து நீதவானின் அனுமதியுடன் இன்று குறித்த பகுதியில் மேலும் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது.

முதல் நாளான இன்று வெடிபொருளும், எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!

வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இன்று  வியாழக்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்.

மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாராக மாற்றம் பெற்றுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா. செந்தில்நந்தனன், பேரவைச் செயலக செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்.

மாகாண ஆளுநரின் செயலாளர், திருமதி சரஸ்வதி மோகனநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்.

பேரவைச் செயலகத்தின் செயலாளர் பி.குகநாதன், பிரதிப் பிரதம செயலாளர், பொது நிர்வாகத்துக்கு மாற்றம் பெற்றுள்ளார்.

இதேவேளை, ஆளுநரின் செயலாளரின் இடத்துக்கு எவருமே நியமிக்கப்படவில்லை.