விடுதலைப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் தமிழ் மக்கள் எடுத்த சிறந்த தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டுமென தமிழ் மக்கள் எடுத்த தீர்மானமானது 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்கு பின்பு எடுக்கப்பட்ட சிறந்த தீர்மானமென யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எமது இனம் ஒரு தலைமையின் கீழ் எழுச்சி பெற்றிருந்தது.

தமிழீழ விடுதலை புலி
உலகத்தின் எந்த தமிழினமாக இருப்பினும் ஒரு தலைவரின் கீழ் சுயமரியாதையுடன் இருந்தவர்கள், 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்கு பின்பு எங்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டது.

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டு ஒவ்வொரு கூறுகளாக பிரிக்கப்பட்டு கட்சியினுள்ளேயே பல மோதல் என்கின்ற அவலநிலையில் நாம் இருக்கும் சந்தர்ப்பத்தில் தமிழினத்தை ஒரு நிலையில் கொண்டு வருவதற்கு வாய்ப்பாக தமிழ் பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.