நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரும் தலைமை அதிகாரியுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதன்படி, சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் அரசியலமைப்பு பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று உறுப்பினர்களைத் தவிர 219 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்படும்.
வழக்கமான முறைப்படி, அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ராஜதந்திர கடவுச்சீட்டு சலுகைக்கு உரிமை உண்டு.
அமைச்சுப் பணியாளர்களின் விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்து
கூடுதலாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் அல்லது கணவர்கள் அதே உரிம சிறப்புரிமைக்கு உரிமையுடையவர்கள்.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டதாக சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு திணைக்களம் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.