ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் கிடைத்தது. எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் அது தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூடுதல் பாதுகாப்பு
இவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்பதால், கூடுதல் படையணிகள் திரும்பப் பெறப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வழங்கப்பட்ட அதிகாரிகளை திரும்ப அழைக்கும் போது, சபாநாயகர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரிகளின் எண்ணிக்கையே குறைக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
முன்னாள் ஜனாதிபதியின் 317 அதிகாரிகளின் நீக்கம் தொடர்பில் தவறான செய்திகளே வெளியானது. அவரது பாதுகாப்பு நீக்கப்படவில்லை. பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த 50 பேர் உட்பட அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப செயற்படுவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.