சுயநலவாதிகளைக் களைந்து உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒன்றிணைக்க முன்வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘சுமந்திரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை திரும்ப அழைத்துள்ளார். நீங்களும் தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலில் நிற்பது அவசியம் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் சேரும் வாய்ப்புக்கள் உள்ளதா’ என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு பதிலளித்திருக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
“நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்புக்கள் இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் என்றென்றும் ஒன்று சேராது.
வேண்டுமெனில் தமிழ்த் தேசியத்தில் உண்மையில் ஈபட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் பலர் எம் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில் சேர்ந்து பயணிக்க முடியும்.
சிலர் ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி ஒற்றுமை ஏற்படுத்த முனையலாம். ஆனால் அவர்களின் சிந்தனை தமிழ்த்தேசியத்தின் பாற்பட்டதா அல்லது சொந்த சுயநலத்தின் பாற்பட்டதா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அவ்வாறானவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள் என்று கூறுவது தமிழ்த் தேசியத்துக்காக அல்ல. சுயநல காரணங்களுக்காகவே ஆகும்” என விளக்கமளித்துள்ளார்.