தமிழ்த் தேசியக்கூட்டணியில் இணையுமாறு தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு

“இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கின்றது. ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினராகிய நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கின்றோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில் வந்து இணைந்துகொள்ள வேண்டும் இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்தது போன்று தற்போதும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள பல்வேறு கட்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகச் செயற்படுகின்றோம்.

கூட்டணியில் ஐந்து கட்சிகள் அங்கம்
இந்தக் கூட்டணியில் தற்போது ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களுக்கு ஐக்கியம் வேண்டும் எனக் கருதுகின்றவர்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் வந்து இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம்.

எமது இந்த அழைப்புக்குப் பதிலளிக்காத இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இந்தத் தேர்தலில் மீண்டும் வந்து போட்டியிடுமாறு கூறுயிருக்கின்றனர். அந்த அழைப்பானது உளப்பூர்வமாக இல்லாமல் வெறுமனே ஏனோதானோ என்பது போல் அமைந்திருந்த்து. உண்மையில் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கின்றது.

ஆனால், நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கின்றோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில் வந்து இணைந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, தமிழ் மக்களின் ஐக்கியம் குறித்து பேசுகின்ற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் எமது கூட்டணியில் இணைந்து செயற்பட விரும்புகின்ற பட்சத்தில் எப்போதும் வந்து இணைந்துகொள்ளலாம். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் ஒருமித்த தீர்மானத்தை எடுக்கக்கூடிய நிலைமையில் அவர்கள் இல்லை. அவர்களுக்கு இடையே உள்முரண்பாடு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே அந்தக் கட்சி இப்போது நீதிமன்றமும் சென்றுள்ளது. அவர்களால் ஒருமித்து திட்டவட்டமான தீர்மானமொன்றை எடுக்க முடியாது. இப்போது இருக்கின்ற நிலைமையைப் பார்த்தால் தங்கள் கட்சிக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு கட்சிக்குள்ளேயே சுமுகமான அமைதியான சூழலை ஏற்படுத்தி ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாதவர்கள் எவ்வாறு பொது இணக்கத்தை ஏற்படுத்த முடியும்.? இதனால் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கப்படுமா என்பது கூட சந்தேகம் நிலவுகின்றது. ஆகவே, தமது கட்சிக்குள்ளேயே உள்ளக முரண்பாடுகளைத் தீர்த்து முதலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கட்டும்.

அதன் பின்னர் ஐக்கியம் குறித்து பேசலாம். கூட்டணி குறித்தும் பேசலாம். எனவே, தமிழரசுக் கட்சியினர் தமது கட்சிக்குள்ளேயே பல பிரிவுகளாக இல்லாமல் ஓரணியாக ஒருமித்த தீர்மானத்தை எடுத்து அதனை உளப்பூர்வமாக முதலில் அறிவிக்கட்டும். அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.” – என்றார்.