தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் கிளிநொச்சியில் நேற்று (16.09.2024) பிற்பகல் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா,

“நாங்கள் இலங்கையில் பல ஆண்டுகளாக இந்த விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். எங்களது எண்ணங்களும் தீர்மானங்களும் அர்ப்பணிப்புகளும் விடுதலைக்காகவே அமைந்திருக்கின்றன.

அரசியல் சூழலில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் எமது இனத்தின் விடுதலையை நாங்கள் மறந்து விட மாட்டோம். எங்களது உயிரை அர்ப்பணிப்பதற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கின்றோம்.

உதாரணமாக, இந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக சத்தியபிரமாணம் செய்து நாடாளுமன்றத்துக்கு போவது வழக்கம். நாங்கள் எங்களது விடுதலைக்காக எங்கள் உயிரை அர்ப்பணிக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம்.

இன்று ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கின்ற பொது வேட்பாளருக்கு நான் என்னுடைய வாக்கை செலுத்துவேன். அதேபோல அனைத்து மக்களும் இந்த பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் நேற்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.