தமிழ் தேசியத்தை சிங்கள வேட்பாளருக்காக விலை பேசிய தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றாக போட்டியிட விரும்பவில்லை ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம்(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வருமாறு விடுத்த அழைப்பு தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தமை எல்லோரும் அறிந்த விடயம் .
தமிழ் மக்கள் சார்ந்து அவர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் முகமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து களம் இறங்கிய போது தமிழரசு கட்சியைச் சார்ந்த சுமந்திரன், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.
சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞானத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி தமிழ் தேசியத்தை தென்னிலங்கை கட்சிக்கு அடகு வைத்தார்.
தேர்தல் முடிவுகள் மாறி அமைந்தன சஜித் பிரேமதாசா தேர்தலில் தோற்றார் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை.
சுமந்திரன் தற்போது ஜனாதிபதி அநுர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார் என பல்டி அடித்து பேசி வருகிறார் அது அவரின் இயல்பான குணம்.
ஆகவே, தென் இலங்கைக்கு அடகு வைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்பதோடு தமிழ் தேசியம் சார்ந்து பயணிப்பவர்கள் சங்குச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.