புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குடன் மக்களின் விருப்பத்துக்கு அமைய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தேன்.
அன்று தொடக்கம் இன்றுவரை என்னால் முடிந்த அளவு தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கின்றேன்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு
அத்துடன் எனது பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் என்னால் இயன்றவரை வழங்கியும் மக்களின் போராட்டங்களிலும் பங்கு பற்றி இருக்கின்றேன்.
வன்னி மாவட்டத்தில் தேவையான என்னால் முடிந்த பல அபிவிருத்தி திட்டங்களையும் நான் முன்னெடுத்து இருக்கின்றேன். தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு காலமும் வழங்கிய ஆதரவிற்கும் கௌரவத்திற்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகிறேன்.
அதே நேரம் தமிழர்களின் உரிமைக்காக தொடர்சியாக நான் உழைத்துக் கொண்டிருப்பேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.
எனக்கு தொடர்ச்சியான ஆதரவை இவ்வளவு காலமும் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் உங்களோடு நான் பயணிப்பேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.