ராஜபக்ஷ குடும்பத்தினர் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் – மொட்டு கட்சி அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் அவரது பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (10) பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் சமசமாஜக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.