சஜித்தை ஆதரிப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் இருவர் எடுத்த தீர்மானம்

தமிழரசுக் கட்சிக்குள் இருவர் குரலை உயர்த்திப் பேசி, அதிகாரத் தோரணையில் தீர்மானம் மேற்கொள்ளும் போக்குதான் காணப்படுகின்றது என்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுககு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இவ்வருடம் ஜனவரியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சித் தலைவர் தெரிவுடன் கட்சி இரு அணிகளாக மாறிவிட்டது என்பது உண்மை. அதன் பின்னர் எந்தவொரு விடயத்திலும் ஒற்றுமையின்றி செயற்படும் போக்கினையே என்னால் அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் இணைந்து மேற்கொள்ளவில்லை. மாறாக ஒரு சாராரின் தன்னிச்சையான ஆதிக்கத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ, தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஏற்கனவே தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறீதரனோ அந்த மத்தியக் குழுக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஷ்வரன் போன்றோரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதுபோன்று இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட முறை தவறானது என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவும் கூறியிருக்கின்றார்.

ஆகையினால் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழரசுக் எடுத்த தீர்மானமாக நான் கருதவில்லை. மாறாக அதனை கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரின் தீர்மானமாகவே பார்க்கின்றேன்.

அங்கு இருவர் குரலை உயர்த்திப் பேசி, அதிகாரத் தோரணையில் தீர்மானம் மேற்கொள்ளும் போக்கு நிலவுகின்றது. ஆகவே மக்கள் நிச்சயமாக சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.